ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி

ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி-One Country One Law Presidential Task Force

- ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியீடு
- பெப்ரவரி 28 இற்கு முன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) முதல் அமுலாகும் வகையில், ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன் உறுப்பினர்கள்

1. கலகொடஅத்தே ஞானசார தேரர்
2. பேராசிரியர்‌ தயானந்த பண்டார
3. பேராசிரியர்‌ சாந்திநந்தன விஜேசிங்க
4. பேராசிரியர்‌ சுமேத சிறிவர்தன
5. என்‌. ஜி. சுஜீவ பண்டிதரத்ன
6. சட்டத்தரணி இரேஷ்‌ செனெவிரத்ன
7. சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே
8. எரந்த நவரத்ன
9. பாணி வேவல
10. மெளலவி மொஹொமட்‌ (காலி உலமா சபை)
11. விரிவுரையாளர்‌ மொஹொமமட்‌ இந்திகாப்‌
12. கலீல்‌ ரஹூமான்
13. அஸீஸ்‌ நிசார்தீன்‌

அதற்கமைய குறித்த செயலணி,

இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை செயற்படுத்தல் தொடர்பாக ஆராய்ந்து அதற்காக சட்ட வரைவு ஒன்றை தயாரித்ததல்.
நீதி அமைச்சினால் அது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களை ஆராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதலும்

ஆகிய பொறுப்புகள், ஜனாதிபதியினால் குறித்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த செயலணி குறைந்த பட்சம் மாதத்திற்கு ஒரு முறை தனக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், இறுதி அறிக்கையை 2022 பெப்ரவரி 28ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்குமாறு ஜனாதிபதியினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏதேனும் அரசு ஊழியர் அல்லது அமைச்சு திணைக்களம் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனத்தின் உத்தியோகத்தர் ஒருவர், குறித்த செயலணியினால் ஒப்படைக்கப்படும் கடமைகளை நிறைவேற்ற தாமதிக்கும் அல்லது தவறும் பட்சத்தில் அது தொடர்பில் தனக்கு அறிவிக்குமாறு குறித்த செயலணிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


நீதியை நிலைநாட்டுவதில் சட்டத்தின் பாதுகாப்பு சர்வசாதணரமாக்கப்பட வேண்டுமென்பதை கவனத்திற் கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்படுள்ளது.

அத்துடன், இனம், மதம், குலம் அல்லதே வேறேதேனும் காரணத்தினால் எந்தவொரு நபரும் சட்டத்தின் பாகுபாட்டுக்கு அல்லது விசேட கவனத்துக்கு ஆளாகக்கூடாது என்பது அடிப்படை உரிமைகளின் கீழ் காட்டப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் எண்ணக்கருவைச் செயற்படுத்தவது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித விழுமியங்களை அடையும் முறைமைய என தென்படுவதால் அதனை உறுதி செய்யும் வகையில் குறித்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PDF File: