எரிபொருள் விலை உயராது அச்சம் கொள்ள வேண்டாம்

அரசாங்கம் தெளிவாக அறிவித்தது

அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் நிலவுவதாகவும், ஆனால் தற்போது நாட்டில் அவ்வாறான எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசாங்கம்  இடமளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்கப்பூரின் விசொல் ஏசியா தனியார் நிறுவனத்திடமிருந்து அடுத்த எட்டு மாதங்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோலை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது, திறந்த சந்தைப் பொருளாதாரம் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில், வழங்கல் மற்றும் தேவைக்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.இந்த காரணிகள் அனைத்தும் சந்தை விலை அதிகரிப்பு காரணமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் விலைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. விலைகள் மற்றும் திறந்த சந்தையில் நியாயமான போட்டி அதிகரிப்பு பொருட்களின் விலைகளை குறைக்க வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏற்றுமதி வருமானம் மற்றும் கையிருப்பு அதிகரிப்பதோடு எதிர்வரும் மாதங்களில் பொருளாதார நிலைமை சீராகும்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இருந்ததை விட சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை சுமார் 84 டொலர்கள் அதிகரித்துள்ளது. அதனால் இந்திய எண்ணெய் நிறுவனம் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, இந்நாட்டு மக்களின் இன்னல்களைப் போக்குவதற்கு எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு சிபெட்கோ நிறுவனம் தீர்மானம் எடுக்கவில்லை எனவும், அழுத்தத்தையும் நட்டத்தையும் தாங்கிக்கொண்டு மக்களுக்கு எரிபொருளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மக்களின் கஷ்ட நிலையை கருத்திற் கொண்டு சிபெட்கோ நிறுவனம் விலைகளை அதிகரிக்க முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றார்.

ஷம்ஸ் பாஹிம்