ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை ஒக்டோபர் 15இல்

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை நாளை மறுதினம் 15ஆம் திகதி மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் அவரது சகோதரரும் அவர்களது சட்டத்தரணி மூலம் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் மூலம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு விடுதலை பெற்றுத் தருமாறு உத்தரவு பிறப்பிக்கும்படி கோரியே இம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு தொடர்பான விசாரணை நேற்றைய தினம் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமான விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவுடன் சம்பந்தப்பட்ட மேலதிக விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 15 ஆம் திகதி மீண்டும் விசாரணையை முன்னெடுக்க நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்