மூன்றாவது சமையல் எரிவாயு நிறுவனம்; எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவைக்கு யோசனை

மூன்றாவது போட்டி நிறுவனமாக சமையல் எரிவாயு சந்தையில் பிரவேசிப்பதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்ததான நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவைக்கு யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் வகையில் கடந்த ஆகஸ்ட் 09ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மூன்றாவது போட்டி சமையல் எரிவாயு நிறுவனம் தொடர்பிலேயே அதன்போது கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூன்றாவது போட்டி நிறுவனமாக சந்தையில் பிரவேசிப்பதற்கு அதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பின்னர் அதற்கான பொருத்தமான முறைமை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்த இணை நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவின் மூலம் நாளாந்தம் 70 லிருந்து 90 மெற்றிக்தொன் அளவில் எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் அது நாட்டின் கேள்வியில் ஐந்து வீதமாகவே அமைந்துள்ளது.

புதிய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தினமும் 300 மெட்ரிக் தொன் எல்ஜி கேஸ் தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அது நாட்டின் கேஸ் கேள்வியில் 20 வீதத்தை நிறைவு செய்யும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு பெற்றுக்கொள்ளும் வகையிலும் அதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணவும் மேற்படி செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவின் சில்லரை வர்த்தகம் சாத்தியமாக முன்னெடுக்கப்படும் போது ஏனைய இரண்டு நிறுவனங்களிடமும் கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ள உடன்படிக்கையை விலக்கிக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்