ஒரு நாள் சம்பளத்தை அறவிடும் சுற்றறிக்கையை வாபஸ் பெறவேண்டும்

கொவிட்-19 நிதியத்திற்கென கிழக்கு மாகாண அரசாங்க ஊழியர்களிடமிருந்து அக்டோபர் மாத சம்பளத்தில் இருந்து ஒரு நாள் சம்பளத்தை அறவிடக் கோரும் கிழக்கு மாகாண பிரதம செயலாளரது சுற்றறிக்கையை, உடனடியாக மீளப் பெறுமாறு இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வோண்டுகோளை வலியுறுத்தி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருக்கு  புதன்கிழமை (29) தமது சங்கம் அவசர கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாக அதன் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

கொவிட் பிரச்சினை காரணமாக நாட்டில் உள்ள சகல தரப்பினரும் பாதிக்கப்பட்டு, பல்வேறு வகையான துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இதற்கு அரசாங்க ஊழியர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. நாட்டில் சகல பொருட்களதும் விலைவாசி உயர்வு காரணமாக மாதாந்த சம்பளத்தை நம்பியிருக்கும் அரச ஊழியர்கள் அனைவரும் பல கஷ்டமான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தமது ஏழ்மை நிலைமையை வெளியே சொல்ல முடியாத ஒரு கௌரவ பிரச்சினைகளுக்குள் அவர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர்.
ஏனைய மாகாணங்களில் அரச ஊழியர்களிடம் கொவிட் நிதி சேகரிப்பு எதுவும் இடம்பெறாத நிலையில், கொவிட் பெருந்தொற்று எல்லோருக்கும் உரியது. சகலரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற அடிப்படையில், கிழக்கில் அரச ஊழியர்களிடம் அவர்களது சம்பளத்தில் ஒரு நாளுக்குரிய தொகை அறவிடும் சுற்றறிக்கை உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என எமது சங்கம் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

(கல்முனை விசேட நிருபர்)