தேவாலயங்கள் மீது தாக்குதல்? பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

தேவாலயங்கள் மீது தாக்குதல்? பாதுகாப்பு அமைச்சு விளக்கம்-Possible Church Attack Informend by Navy-Defense Ministry Issues Clarification

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் :-

சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல.

எனவே, இவ்வாறான அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில்  பொதுமக்கள் எவ்வித அச்சமுமடைய தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஸாதிக் ஷிஹான்


தாக்குதல் இடம்பெறவுள்ளதாக தகவல்?

நேற்றைய தினம் (28) கடற்படை அதிகாரிகள் குழுவினர், ஜா-எல போபிட்டியவிலுள்ள புனித நிக்கலஸ் தேவாலயத்திற்கு சென்று, குண்டுத் தாக்குதல் இடம்பெறவுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதால், தேவாலயத்தில் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்கு வந்த கடற்படை அதிகாரி, குறித்த வேளையில் தேவாலயத்தின் தந்தை அங்கில்லாததைத் தொடர்ந்து, அங்கிருந்த பணிப் பெண்ணிடம், இதனைத் தெரிவித்துள்ளதுடன், தெரியாதவர்களை ஆலயத்திற்குள் எடுக்க வேண்டாமெனவும் தெரிவித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.