இன்று நள்ளிரவு முதல் தடுப்பூசி பெற்று இலங்கை வருவோருக்கு வீடு செல்ல அனுமதி

இன்று நள்ளிரவு முதல் தடுப்பூசி பெற்று இலங்கை வருவோருக்கு வீடு செல்ல அனுமதி-No Need On Arrival PCR for Passengers Arriving in Sri Lanka From Sep 29

- சுற்றுநிருபம் வெளியீடு (UPDATE)
- விமானத்தில் ஏற 72 மணித்தியாலத்திற்கு முன் PCR முடிவு அவசியம்
- தடுப்பூசி ஏற்றி 14 நாட்கள் முழுமைப்படுத்தியிருப்பது கட்டாயம்

இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள், விமானத்தில் ஏறும் முன் மேற்கொண்ட கொவிட்-19 தொற்று தொடர்பான PCR முடிவுகளுக்கமைய, மீண்டும் இலங்கையில் PCR சோதனை மேற்கொள்ளாது விமான நிலையத்திலிருந்து வீடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு (29) முதல் இந்நடைமுறை அமுலுக்கு வருவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதற்காக, கொவிட்-19 தடுப்பூசிகள் இரண்டையும் முழுமையாக பூர்த்தி செய்து 14 நாட்கள் பூர்த்தி செய்திருப்பது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் இன்று (28) பிற்பகல் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், இது தொடர்பான தொழில்நுட்பக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளின் பேரில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதுடன், இதில் சுகாதார மற்றும் சுற்றுலா அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

No-Need-On-Arrival-PCR-for-Passengers-Arriving-in-Sri-Lanka-From-Sep-29

தடுப்பூசி பூர்த்தி செய்யாதவர்கள்
இதேவேளை, முழுமையாக தடுப்பூசி போடாத வெளிநாட்டவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டலுக்கு, தனிமைப்படுத்தல் உயிர்க் குமிழி பாதுகாப்பின் அடிப்படையில், செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளதுடன், அங்கு வைத்து அவர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

எனினும், இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் அல்லது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் PCR சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் அவர்களுக்கு தொற்று ஏற்படாவிட்டால், அவர்களை வீட்டிற்கு அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும், அவர்களுக்கு 12ஆவது நாளில் மீண்டும் மேற்கொள்ளும் PCR சோதனையில் அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படாவிட்டால், அவர்களை சமூகத்துடன் இணைக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டு தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாதவர்கள், அரசாங்க தனிமைப்படுத்தல் மையங்களில் அல்லது அவர்கள் விரும்பும் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இதுவரையான நடைமுறை
தற்போது, ​​நாட்டிற்கு வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன் கட்டாயம் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், அவர்களது சோதனை முடிவுகளின் அடிப்படையில், அவர்கள் தொற்றாளர்களாக இல்லையெனின் மாத்திரம் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, இரண்டு வாரங்கள் பூரணப்படுத்தப்பட்ட பயணிகள் இலங்கை திரும்பும்போது, அவர்களுக்கு மீண்டும் PCR சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளுக்கமைய, அவர்கள் சமூகத்தில் இணைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களின் தனிமைப்படுத்தல் தொடர்பான சுற்றுநிருபம்

PDF File: