- நெல் கொள்வனவு தொடர்பிலும் விலைகள் அறிவிப்பு
- பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களால் நடவடிக்கை
பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களால், அரிசிக்கான சில்லறை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய அறிவிக்கப்பட்ட விலைகள் (ஒரு கி.கி.)
- நாட்டரிசி - ரூ.115
- சம்பா - ரூ.140
- கீரி சம்பா - ரூ.165
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் கடந்த செப்டெம்பர் 02ஆம் திகதியிடப்பட்டு, அரிசிக்கான உச்சபட்ச விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கு நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய இவ்வாறு அரிசிக்கான விலைகளை, அரிசி ஆலை உரிமையாளர்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அரிசிக்கான உச்சபட்ச விலைகள் (ஒரு கி.கி.) வருமாறு:
- வெள்ளை/ சிவப்பு பச்சை அரிசி - ரூ. 95
- வெள்ளை/ சிவப்பு நாட்டரிசி - ரூ. 98
- வெள்ளை/ சிவப்பு சம்பா - ரூ. 103
- கீரி சம்பா - ரூ. 125
பாவனையாளர் அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, விவாயிகளிடமிருந்து நெல் கொள்வனவிற்காக அறிவிக்கப்பட்ட நிர்ணய விலையில் எவ்வித மாற்றமும் இல்லையென கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்திருந்தார்.
இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு, அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களால், விவாசயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லின் சில்லறை விலைகளையும் அறிவித்துள்ளனர்.
அதற்கமைய நெல் கொள்வனவு விலைகள் (ஒரு கி.கி.)
- நாடு நெல் - ரூ. 62.50
- சம்பா - ரூ. 70
- கீரி சம்பா - ரூ. 80
2021 சிறுபோக அறுவடையை கவனத்திற் கொண்டு, விவசாயிகளின் நெல் அறுவடையை, நாட்டு நெல் ஒரு கிலோ 55 ரூபாவுக்கு நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்வதற்கும், அவ்வாறு கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும் கடந்த வாரம் (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.