பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அமைச்சரவையில் எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
மேற்படி பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பில் வாழ்க்கைச் செலவு குழுவின் யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அதற்கான தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி பொருட்களுக்கான தட்டுப்பாடு சந்தையில் நிலவும் அதேவேளை கடந்த ஜூலை மாதம் முதல் பால் மாவுக்கான தட்டுப்பாடு தொடர்கிறது. அவற்றுக்கு தீர்வு காணும் வகையிலேயே இன்று திங்கட்கிழமை அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொள்ளும் என்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவின் அங்கத்தவரும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவன்ன நேற்று தெரிவித்தார்.வாழ்க்கைச் செலவு குழுவின் யோசனைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பம் அமைச்சரவைக்கு உள்ளதாகவும் விலைகளை அதிகரிப்பது அல்லது அதிகரிக்காமல் விடுவது தொடர்பில் அமைச்சரவையே தீர்மானிக்குமென்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்