மிருகங்களுக்கு வைத்த கட்டுத்துப்பாக்கி வெடித்து இருவர் உயிரிழப்பு

மிருகங்களுக்கு வைத்த கட்டுத்துப்பாக்கி வெடித்து இருவர் உயிரிழப்பு

- கட்டுத்துப்பாக்கியை வைத்த நபர் கைது

காட்டு மிருகங்களை வேட்டயாட கட்டப்பட்ட இரண்டு கட்டுத்துப்பாக்கிகள் வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மேலுமொருவர் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (23) திறப்பனை பொலிஸ் பிரிவின் பெரியகுளம முரியாகல்ல பகுதியிலுள்ள குளத்தின் மேல் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

60, 44 வயதுடய பெரியகுளம திறப்பனை மற்றும் முரியாகல்ல பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

கட்டுத்துவக்கினை கட்டியதாக சந்தேகிக்கப்படும் திறப்பனை பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஐ.எம்.பீ. ரத்னாயக்கவின் ஆலோசணைப்படி குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பியரத்ன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(அநுராதபுரம் தினகரன், திறப்பனை தினகரன் நிருபர்கள்)