துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிக்க பணிப்பு

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிக்க பணிப்பு-PM Orders the Release of All Essential Commodities Held at Ports ASAP

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விரைவாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு தொடர்பிலான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டம் Zoom தொழில்நுட்பத்தின் மூலம் இடம்பெற்றது.

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிக்குமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பில் கவனம் செலுத்தி இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் சுங்க பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பிரதமர் இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இவ்வாறு விடுவிக்கப்படுகின்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை துரிதகதியில் சதொச மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் ஊடாக மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிற்கு அறிவித்துள்ளார்.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்கும் பொறுப்பை வர்த்தக அமைச்சு மற்றும் விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஏற்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

பதவி விலகிய நுகர்வோர் விவகார அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு தாம் முன்வைத்த முறைப்பாட்டினை விரைவில் விசாரிக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கமைய, குறித்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அந்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர், பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளார்.