தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார் மனோ

இவரது செயற்பாடு அரசு கைதிகளை விடுவிக்கும் முயற்சிக்கு தடங்கலாக அமையும்

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் என். ரவிக்குமார் கண்டனம்

ஐந்து வருடங்கள் நல்லாட்சியில் சகலவிதமான அதிகாரங்களுடன் இருந்தபோது வாய்மூடி, கைகட்டி, மௌனமாக இருந்துவிட்டு தற்போது அரசியல் விளம்பரம் தேடுவதற்காக அனுராதபுரம் சிறைச்சாலை முன்பாக நின்று முகநூலில் வீடியோ மற்றும் படங்களை உள்ளடக்கிய பதிவுகளை பதிவேற்றம் செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மைத்திரி-,ரணில் நல்லாட்சியை தானே கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்து வந்த மனோ கணேசன், அந்த நல்லாட்சியில் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த தமிழ் அரசியல் கைதிகளை ஓரிரு நாட்களிலேயே விடுவித்திருக்கலாம். ஆனால் அதனை அப்போது செய்யாது இப்போது விழுந்திருக்கும் தனது செல்வாக்கை சரி செய்வதற்காக இரண்டு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களையும் தன்னுடன் கூட அழைத்துச் சென்று அனுராதபுரம் சிறைச்சாலை முன்பாக நாடகமாடுகிறார் எனவும் ரவிக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.

இன்று அனுராதபுர சிறைச்சாலைகளில் இருக்கும் அத்தனை கைதிகளும் நல்லாட்சி அரசாங்கத்திலும் அதே சிறையில்தான் இருந்தார்கள் என்பது மனோ கணேசனுக்கு தெரியாது இருப்பது வேதனைக்குரிய விடயம். தான் சார்ந்திருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் குறைந்தது ஒரு தமிழ் சிறைக்கைதியையாவது இவர் முயற்சி எடுத்து விடுவித்திருந்தால் இவர் இன்று போடும் கூச்சலுக்கு நாங்களும் உறுதுணையாக இருந்திருப்போம்.

ஆனால் அப்படி எதுவும் இவர் நல்லாட்சியில் சாதனை செய்யவில்லை. எனவே தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு எனும் வார்த்தையை உச்சரிக்கவே இவர் தகுதியற்றவர் என்பதாகவே நாங்கள் கருத வேண்டும்.