அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் தொடர்பான விசாரணை விரைவில்

அமைச்சர் சரத் வீரசேகர IGPக்கு உத்தரவு

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியொருவரை, துப்பாக்கி முனையில் முழந்தாளிடச் செய்து அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் நேற்று (16) முறைபாடொன்றை பதிவு செய்திருந்தது.

சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபரான இராஜாங்க அமைச்சரை, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு முறைபாட்டாளர் தரப்பு கோரியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றால், விசாரணைகளை முன்னெடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்டுள்ள முறைபாடு குறித்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்