முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்றையதினம் (17) வரை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் குறித்த உத்தரவை வழங்கியிருந்தார்.
இவ்வழக்கின் 5ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள, ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் எம்.பியின் வீட்டில் பணிபுரிந்த நிலையில், தீக்காயங்களுடன் மரணமடைந்த 16 வயதுச் சிறுமி, டயகம ஹிஷாலினி ஜூட்குமார் தொடர்பான சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி மற்றும் மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரர், சிறுமியை அழைத்து வந்த தரகர் ஆகியோர் கடந்த ஜூலை 23ஆம் திகதி கைது செய்யட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த தரகர் மற்றும் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கடந்த 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சினமன் கிராண்ட் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அவ்வழக்கின் 7ஆவது சந்தேகநபரான முன்னாள் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு, குறித்த வழக்கில் செப்டெம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.