விமான நிலைய போலி மின்னஞ்சல் தொடர்பில் வீணாக அச்சமடைய தேவையில்லை

விமான நிலைய போலி மின்னஞ்சல் தொடர்பில் வீணாக அச்சமடைய தேவையில்லை-Do Not Panic Over Katunayake Airport Fake-e-mail-Defence Secretary-Kamal Gunaratne

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் பாணியில் கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் போலி மின்னஞ்சல் தொடர்பில் பொது மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

விமான நிலையத்தின் பாதுகாப்பு போதியளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் வீணான அச்சம் தேவையில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, நாட்டிலுள்ள சகல பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க பிரிவினர்களும் தற்போதுள்ள அமைதியை சீர்குலைக்க எவருக்கும் வழிவகுக்காமல் தத்தமது கடமைகளை திறம்பட முன்னெடுத்து வருகின்றனர் என்றும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தனிப்பட்ட நலனை எதிர்பார்த்து கைக்குண்டொன்றை வைத்த இரண்டு சந்தேக நபர்கள் தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஸாதிக் ஷிஹான்