முடக்க நிலைமையை வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளை இலாபம்!

கொவிட் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கையில், உணவுப் பொருட்களின் விலைகளும் மலை போல உயர்ந்து விட்டன. ஊடரடங்கு உத்தரவை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வர்த்தகர்கள், உணவுப் பொருட்களின் விலைகளை தாங்களாகவே உயர்த்திக் கொண்டுள்ளனர்.

ஒருபுறத்தில் மொத்த வியாபாரிகள் பலர் தங்களது களஞ்சியங்களில் மூடைமூடையாக பொருட்களை பதுக்கிக் கொண்டனர். பொருட்களுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், சந்தர்ப்பம் வருகின்ற போது கொள்ளை இலாபம் ஈட்டலாம் என்பது அவர்களது எண்ணமாக இருந்தது. அவ்வாறு பதுக்கி வைக்கப்பட்ட சீனி உட்பட பெருந்தொகை உணவுப் பொருட்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் சில்லறை வியாபாரிகள் பலரின் சுயநலன் மிக்க நடவடிக்கைகள்... கொழும்பு போன்ற பிரதான நகரங்களில்தான் வியாபாரிகள் பலரின் கொள்ளை இலாப வியாபார நடவடிக்கைகள் அதிகம். மரக்கறிகள், பழங்கள் மற்றும் உபஉணவுப் பொருட்களை தாங்கள் விரும்பிபடி கூடுதல் விலைகளை நிர்ணயித்து அவர்கள் ஈட்டிய கொள்ளை இலாபம் மிக அதிகமாகும். வாகனங்களில் வீதிவீதியாக உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் அவர்கள் ஊரடங்கு காலத்தில் ஈட்டுகின்ற இலாபம் அநீதியானது.

மொத்த வியாபாரிகளின் பதுக்கல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை திடீர் சோதனை மூலம் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிகின்றது. ஆனால் வீதிகளில் வியாபாரம் செய்வோர் மற்றும் சிறிய கடைகளை வைத்திருப்போரின் கொள்ளை இலாப செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதென்பது இயலாத காரியம். அவ்வாறு திடீர்ப் பரிசோதனைகள் மேற்கொள்வதானால் பெருமளவானோரை கைது செய்ய வேண்டியிருக்கும். அவர்களது அநீதியான வியாபாரம் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.

கொரோனா பேரிடர் காலத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தியபடி குறுகிய காலத்தினுள் பெரும் பணம் ஈட்டுபவர்கள் இவர்கள்தான். அதுவும் கொரோனா முடக்கத்தினால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடமிருந்துதான் இவ்வாறான வியாபாரிகள் கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றார்கள். மக்களும் மனம் புழுங்கியவாறு வேறு வழியின்றியே அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.

சிறு வியாபாரிகள் பலர் மேற்கொள்கின்ற கொள்ளை இலாப வியாபாரம் குறித்து முக்கியமான விடயமொன்றை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. பிரதான நகரங்களில் மாத்திரமே இவ்வாறு அதிக விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய முடிகின்றது. கிராமங்களில் உள்ள மக்களை இலகுவில் ஏமாற்ற முடியாது. கிராமங்களிலேயே இவ்வாறான உணவுப் பொருட்கள் விளைச்சல் செய்யப்படுவதால் அங்கெல்லாம் நியாயமான விலையில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடிகின்றது.

கிராமங்களில் விளைகின்ற மரக்கறி, பழங்கள் போன்ற பலவிதமான உணவுப் பொருட்கள் நகரங்களுக்கு விற்பனைக்கு வருகின்ற போதுதான் விலைகள் பலமடங்கு அதிகரிக்கின்றன. கிராமங்களில் உள்ள செய்கையாளர்களிடமிருந்து மிகவும் குறைந்த விலைக்கே காலடிக்குச் சென்று உணவுப் பொருட்களை மொத்த வியாபாரிகள் கொள்வனவு செய்கின்றனர். கிராமங்களில் இருந்து நேரடியாகக் கொள்வனவு செய்யப்படுகின்ற இப்பொருட்கள் நேரடியாக நகரங்களுக்கு வந்து சேருவதில்லை.

இரண்டு மூன்று வியாபாரிகளிடம் கைமாறிய பின்னரே நகரங்களில் உள்ள மக்களின் காலடிக்கு அப்பொருட்கள் வந்து சேருகின்றன. அவ்வாறு நகரங்களுக்கு வந்து சேருகின்ற உணவுப் பொருட்களின் விலைகள் ஐந்தாறு மடங்கு விலை அதிகரித்து விடுகின்றன. இதற்கான உதாரணமாக பப்பாளிப்பழத்தைக் கூறலாம். அநுராதபுரம் கிராமப் பகுதிகள் போன்ற பிரதேசங்களில் செய்கையாளர்களிடம் இருந்து ஒரு கிலோ இருபது ரூபாவுக்கும் குறைவாக கொள்வனவு செய்யப்படுகின்ற பப்பாளிப்பழம் கொழும்பில் ஒரு கிலோ 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

‘இலாபம் இன்றி வியாபாரம் இல்லை’ என்பது உண்மை. ஆனால் இத்தனை மடங்கு கொள்ளை இலாபம் ஈட்டுவது நியாயமில்லையென்பதை வியாபாரிகள் ஒவ்வொருவருமே புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவ்விடயத்தில் நுகர்வோர் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, கிராமங்களில் உள்ள உற்பத்தியாளர்களின் நிலைமைதான் பரிதாபம். அங்குள்ள தோட்டங்களில் இரவுபகலாக அயராது பாடுபட்டு பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்ற அவர்களுக்கு கிடைப்பதோ சிறிய தொகை பணம் மாத்திரமே.

அவர்களது உழைப்புக்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை. அவர்கள் தொடர்ந்தும் வறுமையிலேயே வாடுகின்றனர். ஆனால் அவர்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி விற்பனை செய்கின்ற வியாபாரிகள் ஈட்டுகின்ற வருமானமோ மிகவும் அதிகம். இவ்வாறு உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற கொள்ளை இலாப வியாபாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தால் மாத்திரமே உற்பத்தியாளர்களின் வறுமை நிலைமை நீங்கும்.