- தாக்குதலுக்கு தனிநபரே பொறுப்பு; அவர் கொண்ட மத நம்பிக்கை அல்ல: பிரதமர் ஜெஸிந்தா
- 10 வருடங்களாக அந்நாட்டில் வசித்து வந்த கண்காணிப்பில் இருந்து வந்த நபர்
நியூஸிலாந்தின் ஒக்லண்ட் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் 6 பேர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இலங்கையைச் சேர்ந்த நபர் (32) அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ISIS தீவிரவாத அமைப்பின் அடிப்படைவாதங்களால் தூண்டப்பட்ட குறித்த நபர் நியூஸிலாந்தில் கடந்த 10 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் கொண்ட அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்தும் அவரை கண்காணித்து வந்ததாக, அந்நாட்டு பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
ஜெஸிந்தா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், அப்பாவி நியூஸிலாந்து நாட்டவர்கள் மீது, கொடூரமான அடிப்படைவாத நபரினால் தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.
குறித்த நபர் தாக்குதலை நடாத்தி 60 செக்கன்களுக்குள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குறித்த நபரை பின்தொடர்ந்த பொலிஸார், சந்தேகநபர் குறித்த பல்பொருள் அங்காடியில் பொருட்களை கொள்வனவு செய்யப் போகிறார் என நினைத்துள்ளனர்.
ஆனால் அங்கு காட்சிப்படுத்த வைத்திருந்த கத்தியொன்றை திடீரென எடுத்த அவர், ஒரு பித்து பிடித்தவனைப் போல அங்கிருந்தவர்கள் மீது தாக்கியதாக, குறித்த அங்காடியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் 'அல்லாஹு அக்பர்' என கத்தியதாக அதனை அவதானித்த சிலர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தனியானவர் எனவும், அவருடன் வேறு நபர்களுக்கு தொடர்பு இல்லையெனவும் பொதுமக்களுக்கு மேலும் இவ்வாறான அச்சுறுத்தல் ஏற்படாது என அந்நாட்டு பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2019 மார்ச் வெள்ளிக்கிழமையில், கிரைஸ்ட்சேர்ச் இலுள்ள இரு பள்ளிவாசல்கள் மீது வெள்ளையர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, உசார் நிலையில் இருந்து வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தாக்குதலுக்கு பழி வாங்கும் நடவடிக்கையா இதுவென, பிரதமர் ஜெஸிந்தா ஆர்டனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அதனை நிச்சயமாக கூறமுடியாது. இது ஒரு தனியான நபரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அவரே இந்த கொடுமைக்கு பொறுப்பு, அவர் கொண்டுள்ள மத நம்பிக்கை அல்ல என அவர் தெரிவித்தார்.
இந்த தனிநபருக்கு அப்பால் எவரையும் சாடுவது தவறாகும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Add new comment