- அக்ரஹார காப்புறுதி நன்மைகள் மேலும் அதிகரிப்பு
- கற்றாழை செய்கைக்கு 30 வருட குத்தகைக்கு அரச காணி
இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 11 தீர்மானங்கள்
ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் நவம்பரில் முன்வைக்கவுள்ள 2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் கட்டம் கட்டமாக தீர்வு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அதுவரையில் எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதத்தில் கடமையில் ஈடுபடும் ஆசிரியர், அதிபர்களுக்கு ரூ. 5,000 விசேட கொடுப்பனவை வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அமைச்சரவை உப குழுவின் முன்மொழிவிற்கு அமைய, நேற்று (30) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
‘அதிபர்-ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்’ தொடர்பாக ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப செயற்குழு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் 33 தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு கீழ்வரும் தீர்மானங்களை எட்டியுள்ளது.
- அமைச்சரவை உபசெயற்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை கொள்கை ரீதியாக அங்கீகரித்தல்
- ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோகர் சேவை மற்றும் அதிபர் சேவைகள் போன்றவற்றை வரைவிட்ட சேவையாக 2021 நவம்பர் மாதம் 20 திகதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடல்
- அமைச்சரவை உப செயற்குழு மூலம் அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட சம்பளத் திருத்தங்கள், 2022 வரவ செலவுத் திட்டத்தின் மூலம் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- 2021 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமது கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 5,000 ரூபா விசேட கொடுப்பனவு செலுத்துதல்
- உப செயற்குழுவின் இதர யோசனைகள் மாகாண சபைகள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் இணைந்து கல்வி அமைச்சின் மூலம் 06 மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
2. ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்காக தற்போது நடைமுறையிலுள்ள அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழுள்ள நன்மைகளை மேலும் அதிகரித்தல்
2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தமது 70 வயது வரை தற்போது நடைமுறையிலுள்ள அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த தினத்திற்கு முன்னர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளவர்களுக்காக குறித்த நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு இயலுமான வகையில் அக்ரஹார காப்புறுதி திட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2020 ஜூலை மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள பிரதிபலன்களை மேலும் அதிகரித்து ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்புடைய வகையில் அக்ரஹார காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
3. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்குமிடையே கப்பல் தொழில் வல்லுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழை அங்கீகரித்தல் (Certificate of Recognition) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்
வெளிநாடொன்றில் ஏதேனுமொரு சமுத்திரவியல் தேர்ச்சிச் சான்றிதழ் பெற்றுக்கொண்ட கப்பலோட்டி ஒருவர், ஏதேனுமொரு வேறு அரசாங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பலில் தொழில் புரிவதற்காக, குறித்த கப்பல் பதிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தால் அதற்குச் சமாந்தரமான சான்றிதழைப் (Certificate of Recognition) பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.
வர்த்தக கப்பல்கள் போக்குவரத்து செயலகம் தற்போது 33 நாடுகளுடன் அவ்வாறான சான்றிதழ்களை அங்கீகரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதுடன், அதன் மூலம் இலங்கையைச் சார்ந்த அதிகமான கப்பலோட்டிகளுக்கு வெளிநாட்டுக் கப்பல்களில் தொழில் புரிவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இலங்கை 2007 ஆம் ஆண்டு அவ்வாறான சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதுடன், இலங்கையைச் சார்ந்த கப்பல் தொழில் வல்லுனர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் குறித்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளைத் திருத்தம் செய்து புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இருதரப்பினருக்கிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்காக புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்ட மா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, புதுப்பிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
4. நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் இறங்கு துறைக்கு கப்பல்களிலிருந்து நிலக்கரியைக் கொண்டு வருவதற்கான தானியங்கி படகுச்சேவை வழங்குநர் ஒருவரின் சேவையைப் பெற்றுக்கொள்ளல்
2021/2022 மற்றும் 2022/2023 காலப்பகுதியில் லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் இறங்கு துறைக்கு நிலக்கரியை படகு மூலம் போக்குவரத்து செய்வதற்குப் பொருத்தமான சேவை வழங்குநர் ஒருவரை தெரிவு செய்வதற்காக போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது.
அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த சேவை வழங்கலுக்கான ஒப்பந்தத்தை M/s Shreeji Shipping Limited இற்கு வழங்குவதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
5. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக 1958 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்தல்
இந்தியாவில் பணிபுரியும் இலங்கையர்கள், இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு நிதியப் பங்களிப்புத் தேவைகளிலிருந்து விடுபடுவதற்கும், இலங்கையில் பணிபுரியும் இந்தியர்கள் எமது நாட்டிலுள்ள ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்புத் தேவையிலிருந்து விடுவிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இயலுமான வகையில் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக 2018 பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6. விதவைகள், தபுதாரர் மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக மேலதிக நிதி ஒதுக்கீடு வழங்கல்
அரச ஊழியர்களின் ஓய்வூதிய நன்மைகளுக்காக 2021 ஆம் ஆண்டில் 300,000 மில்லியன் ரூபாய்களை திறைசேரி செலுத்தவுள்ளதுடன், அதன்கீழ் விதவைகள், தபுதாரர் மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்காக மாத்திரம் 35,500 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் 2021 ஜூன் மாதம் 30 ஆம் திகதியளவில் 26,367 மில்லியன் ரூபாய்கள் செலவாகியுள்ளதுடன், ஆண்டின் தொடர்ந்து வரும் காலப்பகுதிக்காக 19,000 மில்லியன் ரூபாய்கள் மேலதிக நிதி அவசியமாகவுள்ளது. விதவைகள், தபுதாரர் மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளை செலுத்துவதற்குத் தேவையான நிதி “விசேட சட்ட நிதியொதுக்கீட்டின்” கீழ் ஒதுக்கப்படுவதுடன், அரசியலமைப்பின் 150 ஆவது பிரிவின் (2) ஆவது உப அரசியலமைப்பின் மூலம் நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நிதி அமைச்சர் அவர்களால் கையொப்பமிடப்பட்ட விசேட சட்ட அதிகார அனுமதிப்பத்திரத்தின் (குறைநிரப்பு) மூலம் ஓய்வூதிய திணைக்களத்தின் செலவுத் தலைப்பின் கீழ் 19,000 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.
7. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் கம்போடியா இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர, கடமைகள் மற்றும் சேவைகள் தொடர்பான உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெறுவதிலிருந்து விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் கம்போடியா இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர, கடமைகள் மற்றும் சேவைகள் தொடர்பான உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெறுவதிலிருந்து விடுவிப்பதற்காக இருதரப்பினர்களுக்கிடையேயான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கான ஒப்பந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும், வெளிவிவகார அமைச்சின் உடன்பாடும் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
8. காலநிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்களைத் தணிக்கும் பன்முகப் படிமுறைகள் வேலைத்திட்டம்
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்கும் பன்முகப் படிமுறைகள் வேலைத்திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட விடயத்தலைப்புக்கமைய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 2021 மே மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 03 படிமுறைகளின் கீழ் 434 மில்லியன் அமெரிக்க டொலர் மொத்த மதிப்பீட்டு செலவில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டத்திற்கான 92 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியின் கூட்டு மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
9. ஏற்றுமதிக்காக கற்றாழை தாவர ஒளடத உற்பத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வரையறுக்கப்பட்ட அவுரா லங்கா ஹர்பல்ஸ் தனியார் கம்பனிக்கு நீண்டகால குத்தகைய அடிப்படையில் காணி வழங்கல்
வரையறுக்கப்பட்ட அவுரா லங்கா ஹர்பல்ஸ் தனியார் கம்பனி அநுராதபுர மாவட்டத்தில் சேதன செய்கை முறையின் கீழ் ஏற்றுமதிக்கான கற்றாழை தாவர ஒளடத உற்பத்தி தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்காக “உலர் வலய கிராமிய பொருளாதார அபிவிருத்தி கற்றாழைக் கருத்திட்டம்” எனும் பெயரிலான கருத்திட்ட யோசனையை சமர்ப்பித்துள்ளது.
குறித்த கருத்திட்டத்தில் கற்றாழை தாவரத்தின் வேர், கிழங்கு, திண்மக்கூழ் மற்றும் இலையின் வெளிப்பகுதிகளைப் பயன்படுத்தி அதிக சக்தி கொண்ட பானங்கள், ஒளடத மாத்திரைகள், தைலங்கள், உறிஞ்சும் குளிகைகள் (Inhaler) மற்றும் தலைப்பூச்சு எண்ணெய் வகைகள் போன்ற உற்பத்திகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்திட்டத்தின் மொத்த முதலீடு 783 மில்லியன் அமெரிக்க டொலர்களாவதுடன், ஆரம்ப கட்டமாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர் திட்டமிட்டுள்ளார்.
இக்கருத்திட்டத்தின் கீழ் இராஜாங்கனை மற்றும் நொச்சியாகம பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள 2000 ஏக்கர்களில் கற்றாழை விதைக் கன்றுகள் உற்பத்திக்கான நாற்று மேடைகளை உருவாக்குவதற்கும், குறித்த நாற்று மேடைகளில் உற்பத்தி செய்யப்படும் கன்றுகளைப் பயன்படுத்தி கற்றாழைச் செய்கையை மேற்கொள்வதற்காக அநுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள 102,000 ஏக்கர்களைப் பயன்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்காக வழங்கல் பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரத்தின் மூலம் காணி உரிமை கொண்ட குடும்பங்கள் மற்றும் பயிர்ச்செய்கைக்காக அரச காணிகளைப் பயன்படுத்துகின்றவர்களையும் இணைத்துக்கொள்வதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் தொழிற்சாலை மற்றும் நடவடிக்கைகள் அலுவலக வளாகத்தை நிர்மாணித்து மேற்கொண்டு செல்வதற்கும் களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளுக்காக 66 ஏக்கர்கள் வரையான காணியை அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 30 வருட நீண்டகால குத்தகை அடிப்படையில் கம்பனிக்கு வழங்குவதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சுதேச ஒளடதங்களை மக்களுக்கு வழங்கும் கருத்திட்டம்
தற்போது நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் உள்ளடக்கியதாக சுதேச நோய் எதிர்ப்புச் சக்தி ஒளடதங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு ஊக்கி மூலிகைக் கஞ்சி வழங்குவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆயர்வேத திணைக்களத்தின் வேதியல் சூத்திரக் குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள மூலிகைப் பேழையொன்றை நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்குவதற்காக, முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வருமானம் இழந்த 25 இலட்சம் குழும்பங்களுக்கும், இரண்டாம் கட்டமாக ஏனைய அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்குவதற்காகவும் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
11. தனியார் துறையின் முதலீட்டின் கீழ் மீள்பிறப்பாக்க எரிசக்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கரிசனை வெளிப்பாட்டுக் கருத்திட்ட (Expression interest EOT) கோரல்
2030 ஆம் ஆண்டாகும் போது எமது நாட்டு மின்சாரத் தேவையின் 70% வீதமானவை மீள்பிறப்பாக்க எரிசக்தி வளங்கள் மூலம் பூர்த்தி செய்வதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது எமது நாட்டின் நீர் மின்னுற்பத்தி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், அதற்காக சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைவதற்காக தற்போது நிறுவப்பட்டுள்ள 458 மெகாவாற்று சூரியசக்தி மின்னுற்பத்தி இயலளவை மேலும் 4800 மெகாவாற்றாகவும், தற்போது நிறுவப்பட்டுள்ள 248 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்தி இயலளவை மேலும் 3500 மெகாவாற்றாக அதிகரிக்க வேண்டியும் உள்ளது.
அதேபோல், அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியை தேசிய மின்வலுக் கட்டமைப்புக்கு இயலுமான வகையில் தேசிய மின்வலுக் கட்டமைப்பை நவீனமயப்படுத்த வேண்டியுள்ளது.
அதற்கமைய, அடையாளங் காணப்படும் 50 மெகாவாற்றுக்கு அதிகமான கருத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி குறித்த கருத்திட்டங்களுக்கான நிதியிடலில் ஆர்வம் காட்டும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக கரிசனை வெளிப்பாட்டு முன்மொழிவுத் திட்டங்களை பெற்றுக் கொள்வதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Add new comment