அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தும் முயற்சி

நாட்டில் கொவிட் 19 தொற்று பதிவாகத் தொடங்கியது முதல் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தொற்றுக்கு உள்ளாகின்றவர்களதும் உயிரிழப்பவர்களதும் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்ற தற்போதைய சூழலில், இந்நடவடிக்கைகள் மேலும் விரிவான அடிப்படையில் பரவலாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அவற்றில் தனிமைப்படுத்தல் ஊடரங்கும் அடங்கும். மறுபுறம் இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையும் விரிவான அடிப்படையில் இடம்பெறுகின்றது. இத்தொற்றின் பரவுதலையும் தாக்கத்தையும் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு வகையான நடவடிக்கைகளும் ஏக காலத்தில் சமமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் சிலர் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் பொருட்டு சூட்சுமமான நடவடிக்கைகளையும் அவர்கள் கையாளுகின்றனர். அதாவது நாட்டில் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சில பால்மாக்கள் சந்தையில் இல்லை எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சில வர்த்தக நிலையங்களுக்கு 'ஒடர்' வழங்கினால் தேவையான பால்மாவை பாவனையாளரால் பெற்றுக் கொள்ள முடிகின்றது. இது உண்மையான பால்மா தட்டுப்பாடா? என மக்கள் வினவுகின்றனர்.

இதே போன்று சீனிக்கும் கடந்த சில தினங்களாக தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் நாளை முதலாம் திகதி முதல் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் (சதொச) ஊடாக சிவப்பு சீனியை கிலோ 130.00 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இதேசமயம் சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதன் உண்மை நிலையைக் கண்டறிவதற்காக திடீர் தேடுதல்களையும் சோதனைகளையும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஆரம்பித்துள்ளனர். இவர்கள் கடந்த இரண்டு தினங்களில் மேற்கொண்ட திடீர் சோதனைகளில் பல்லாயிரம் மெற்றிக் தொன் சீனி சில களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக வத்தளை, மாபோலையிலுள்ள களஞ்சியசாலையொன்றில் 4800 தொன்களும், சீதுவ, பண்டாரகம, கம்பஹா ஆகிய பிரதேசங்களிலுள்ள களஞ்சியசாலைகளில் 5400 மெற்றிக் தொன்களும் என்றபடி சீனி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை கடந்த இரண்டு நாட்களில் சில பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது கண்டறியப்பட்டிருக்கும் சீனியின் அளவாகும். அவ்வாறெனில் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இருக்கும் களஞ்சியசாலைகளிலும் சோதனைகளை நடத்தினால் உண்மை நிலைமை வெளிப்படும் என்பது மக்களின் அபிப்பிராயமாக உள்ளது.

சீனி உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்கு விடுவிக்காது மறைத்து வைத்துக் கொண்டு அவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகக் காட்டும் முயற்சியே தற்போது இடம்பெறுகிறது. இதன் ஊடாக சீனி உள்ளிட்ட பொருட்களின் விலையை அதிகரித்துக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விதமான செயற்பாடுகளில் வர்த்தகர்கள் குறிப்பாக உற்பத்தியாளர்களும் மொத்த விற்பனையாளர்களும் ஈடுபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரமாகப் பரவும் கொவிட் 19 தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றும் முயற்சி முன்னெடுக்கப்படும் தற்போதைய சூழலில், இத்தகைய செயற்பாடுகள் எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகும். அவை மனிதாபிமாமற்ற செயற்பாடுகளாகும். தொற்றுநோயிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் பொறுப்பு தனியே அரசாங்ககத்திற்குரியதல்ல. மாறாக வர்த்தகர்கள் உள்ளிட்ட எல்லா தரப்பினரும் ஒன்றுபட்டு இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயற்பட வேண்டும். வர்த்தகர்கள் சமூகப் பொறுப்பை மறந்து செயற்படலாகாது.

இந்தச் சூழலில் அத்தியாவசியப் பொருட்களுக்கு சந்தையில் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொள்கை இலாபம் பெறும் வகையில் பொருட்களுக்கு விலையை அதிகரிக்க முயற்சிப்பதானது, மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாகவே அமையும். குறிப்பாக இது அப்பாவி மக்களை நசுக்கும் செயற்பாடாகும். .

களஞ்சியசாலைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலை யில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சீனியானது கடந்த வருடம் ஒரு கிலோவுக்கு ரூ 85.00 என உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்பட்ட காலப் பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டதாகும். அதேநேரம் சீனிக்கு 25 வீதம் வரிவிலக்கு அளிக்கப்பட்ட சமயம் பல்லாயிரம் மெற்றிக் தொன் சீனி நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டும் உள்ளது.

ஆகவே நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். இப்பொறுப்பிலிருந்து வர்த்தகர்கள் குறிப்பாக உற்பத்தியாளர்களும் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர். இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது இன்றியமையாததாகும்.


Add new comment

Or log in with...