நாட்டின் பல சீனி களஞ்சியங்கள் முற்றுகை; பல்லாயிரம் மெட்ரிக் தொன் சீனிக்கு சீல்

நாட்டின் பல சீனி களஞ்சியங்கள் முற்றுகை; பல்லாயிரம் மெட்ரிக் தொன் சீனிக்கு சீல்-Islandwide Roundup by CAA-So Many Metric Ton Sugar Storage Sealed

- சீனிக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையேற்றும் நடவடிக்கை
- உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் பல்லாயிரம் மெட்ரிக் தொன் சீனியை களஞ்சியப்படுத்தியிருந்த பல களஞ்சியங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

குறிப்பாக வத்தள, மாபோல களஞ்சியமொன்றில் 4,800 தொன் சீனி உள்ளிட்ட சீதுவை, பண்டாரகம உள்ளிட்ட கம்பஹா பகுதிகளில் சுமார் 5,400 மெட்ரிக் தொன் சீனி களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் போலியான வகையில் சீனிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, சீனிக்கு விலையேற்றம் செய்யும் நடவடிக்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் நவம்பரில் சீனி ஒரு கிலோவிற்கான உச்சபட்ச விலை ரூ. 85 என விதிக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்ட சீனியே இவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், சீனிக்கு 25 சதம் எனும் வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டுக்கு பல்லாயிரம் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவ்வாறு சீல் வைக்கப்பட்ட களஞ்சியங்களின் உரிமையாளர்களுக்கு உரிய ஆவணங்களுடன் வருமாறு அறிவித்துள்ளதாக அதிகாரசபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களான சீனி, அரிசி, நெல், சோளம் ஆகியன களஞ்சியப்படுத்தும்போது அவற்றின் களஞ்சியத்தின் அளவு தொடர்பில் உரிய முறையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறு பதிவு செய்யப்படாத வகையில் சீனியை களஞ்சியப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரசபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்திற்கு அமைய, பதிவு செய்யப்படாத களஞ்சிய உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 10,000 வரை அபராதமும், நிறுவனமாயின் ரூ. 10,000 முதல் ரூ. 1,000,000 வரை அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனையே இதற்கான தண்டனையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...