பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்: சிறையிலுள்ளவர்கள் தொடர்பில் பரிந்துரை வழங்க ஆலோசனை சபை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்: சிறையிலுள்ளவர்கள் தொடர்பில் பரிந்துரை வழங்க ஆலோசனை சபை-3 Member Advisory Board Appointed to Make Recommendations on Those in Jail or Under Detention Orders-PMD

- கைதிகள் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க சந்தர்ப்பம்

பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத்தண்டனையை அனுபவிக்கும் மற்றும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆராய்தல், விடுதலை செய்தல் , பிணை வழங்குதல் உள்ளிட்ட அடுத்த கட்ட தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனை சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கு ஏற்ப, குறித்த ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்தார்.

முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான இந்த ஆலோசனை சபையின் ஏனைய உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆர். ஹெய்யந்துடுவ மற்றும் ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் சிறையிலுள்ள மற்றும் தடுப்புக்காவல் உத்தரவில் உள்ளவர்கள் குறித்து ஆராய்தல், விடுதலை செய்தல் , பிணை வழங்குதல் உள்ளிட்ட அடுத்த கட்ட தீர்மானங்கள் தொடர்பில் இச்சபையானது, ஜனாதிபதிக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளும் வழங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக ஆலோசனை சபை நியமிக்கப்படாத காரணத்தால், இதுவரையில் சிறையில் உள்ளவர்களுக்கு தங்கள் உரிமைகள் தொடர்பிலான விடயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இந்த ஆலோசனை சபை நியமிக்கப்பட்டதன் மூலம், கைதிகள் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைக்குமென ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்தார்.


Add new comment

Or log in with...