5,533 அரச வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில்; அமைச்சரவைக்கு அறிக்கை

5,533 அரச வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில்; அமைச்சரவைக்கு அறிக்கை-5533 Vehicles Belongs to the Govt in Unusable Condition-11 Decisions-on-Aug 23 Cabinet

- சுற்றுலா பயணிகளுக்கு ஒரே தடவையில் 180 நாள் வீசா
- இறக்குமதி ஒட்சிசன் 120,000 இலிருந்து 300,000 லீற்றராக அதிகரிப்பு
- ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 37.5 மில்லியன் டொலர் கடன்
- இவ்வார அமைச்சரவையில் 11 தீர்மானங்கள்

அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் தொடர்பாக கீழ்வரும் தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கையொன்று பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சராக, பிரதமரால் அமைச்சரவையின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, அரசாங்கத்திடமுள்ள வாகனங்களில் 5,533 வாகனங்கள் எவ்வித பயன்பாட்டுக்கு எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அரச வணிக நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் காணப்படும் வாகனங்கள் 82,194 ஆகும்.
 • அவற்றில், 76,661 வாகனங்கள் நடப்பில் இயங்குவதுடன், 5533 வாகனங்கள் இயங்கு நிலையற்றதாகக் காணப்படுகின்றது.
 • இயங்கு நிலையிலுள்ள வாகனங்களில் 33,931 வாகனங்கள் அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களிடமும், அரச வணிக நிறுவனங்களிடம் 26,395 வாகனங்களும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 16,335 வாகனங்களும் காணப்படுகின்றன.
 • அவ்வாறே, அரச நிறுவனங்களிலுள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் 8,500 பேருக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டு அவர்களின் பிரத்தியேக மோட்டார் வாகனங்களுக்கு உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொள்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி தகவல்களைக் கருத்தில் கொண்டு தற்போது இயங்கு நிலையில் அல்லாத வாகனங்களில் திருத்தம் செய்யக்கூடிய வாகனங்களைத் துரிதமாக திருத்தம் செய்து பாவனைக்குட்படுத்தவும், திருத்தம் செய்ய முடியாத வாகனங்களை முறையான பெறுகைக் கோரலை பின்பற்றி தாமதிக்காமல் அகற்றுவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

2. 'சுகாதாரத் துறையை மேம்படுத்தும் கருத்திட்டத்தின்' கீழ்  ஆசிய அபிவிருத்தி வங்கியின் மேலதிக நிதி வசதியைப் பெறல்
மிகவும் பரந்தளவிலான ஆரம்ப சுகாதார சேவைக் கட்டமைப்பு அணுகுமுறையுடன் கூடிய ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கில் 'சுகாதாரத் துறையை மேம்படுத்தும் கருத்திட்டத்தை' நடைமுறைப்படுத்துவதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியால் 37.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகவும், 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாகவும், மொத்தமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற கொவிட்-19 தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு, அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க மேற்குறிப்பிட்ட தொகையில் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொவிட்-19 நடவடிக்கைகளுக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக, கொவிட்-19 தொற்றால் அதிகரித்து வரும் நோயாளர்களை முகாமைத்துவப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை மேற்கொள்வதற்காக 'சுகாதாரத் துறையை மேம்படுத்தும் கருத்திட்டத்தின்' கீழ் 125 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடி உடன்பாட்டை எட்டுவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு ஒரே தடவையில் வீசா வழங்கல்
குடிவரவு  மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 'இணையவழி இலத்திரனியல் சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைமையின் (ETA)’' மூலம் சுற்றுலா வீசா விண்ணப்பிக்கும் செயன்முறைக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 'இலங்கை சுற்றுலா கைத்தொலைபேசி செயலி (Mobile App)’ இனைப் பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்கள் வரை செல்லுபடியாகும் சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக 2021.01.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கீழ்வரும் வகையில் வீசா கட்டணங்களை அறவிட்டு குறித்த சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

 • சார்க் நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு - 70 டொலர்கள்
 • சார்க் அல்லாத நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு - 85 டொலர்கள்
 • சிங்கப்பூர், மாலைதீவு, சீசெல்ஸ் நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு - 50 டொலர்கள் (குறித்த நாடுகளுடன் தற்போதுள்ள இருதரப்பு உடன்படிக்கைகளுக்கமைய)

4. கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான திரவ மருத்துவ ஒட்சிசன் 300,000 லீற்றர்களை வாராந்தம் இறக்குமதி செய்தல்
தீவிர நிலைமையிலுள்ள கொவிட்-19 நோயாளர்களுக்கு திரவ மருத்துவ ஒட்சிசன் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் 120,000 லீற்றர் ஒட்சிசனை மாதாந்தம் இறக்குமதி செய்வதற்கு 2021 மே மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பரவிவரும் திரிபடைந்த வைரஸ் காரணமாக ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், போதுமானளவு ஒட்சிசனை நாட்டில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு இயலுமான வகையில் தற்போது மாதாந்தம் இறக்குமதி செய்யப்படும் 120,000 லீற்றர்களுக்குப் பதிலாக வாராந்தம் 300,000 லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களில் 2021 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்கான முன்னேற்றம்
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தொடர்பான கீழ்வரும் தகவல்களை நிதி அமைச்சரால் அமைச்சரவையின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.

 • 43 அமைச்சுக்களின் கீழ் மொத்தச் செலவு 1000 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்கள் 319 தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
 • 2030 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படும் குறித்த கருத்திட்டங்களின் மொத்தப் பெறுமதி கிட்டத்தட்ட 7.1 ட்ல்லியன் ரூபாய்களாகும்.
 • இதுவரை அவற்றில் 1.75 ட்ரில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டில் 745 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • குறித்த 319 கருத்திட்டங்களில் அரசாங்கத்தின் புதிய அபிவிருத்தி அணுகுமுறையை உறுதிப்படுத்தும் 88 கருத்திட்டங்கள் அடங்குகின்றன.
 • அதற்கான ஒட்டுமொத்த மதிப்பீட்டு செலவு 2.5 ட்ரில்லியன் ரூபாய்களாவதுடன், இவ்வருடத்திற்கு கருத்திட்டங்களுக்காக 232 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 • குறித்த கருத்திட்டங்களில், அனைவருக்கும் குடிநீர், 100,000 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், நூறு நகரங்கள் வேலைத்திட்டம், நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித்திட்டம் மற்றும் 'சௌபாக்கியா' உற்பத்திக் கிராம நிகழ்ச்சித்திட்டம் போன்ற வேலைத்திட்டங்களும் கொவிட்-19 தொற்று நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களும் உள்ளடங்குகின்றன.
 • நாட்டில் நிலவும் கொவிட் - 19 தொற்று நிலைமையால் குறித்த கருத்திட்டங்களுக்காக முதல் அரையாண்டு காலப்பகுதியில் இலக்காகக் கொள்ளப்பட்ட செலவில் 55% வீதமானவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு இயலுமான வகையில் குறைந்த முன்னேற்றங்களைக் கொண்ட கருத்திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்தவும், குறித்த கால அட்டவணையின் பிரகாரம் கருத்திட்டங்களைப் பூர்த்தி செய்து அவற்றின் பயன்களை பொதுமக்களுக்கு வழங்கும் வகையிலும் கருத்திட்டங்கள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சின் நெருங்கிய மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

6. சமனல வாவி நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு திருத்தம் செய்தல்
120 மெகாவாற்று இயலளவுடன் கூடிய சமனல வாவி மின்னுற்பத்திக் கருத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கைகள் 1992 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தில் நீர்க்கசிவு நிலவுவது குறித்த வருடத்திலேயே அடையாளங் காணப்பட்டதுடன், அது தொடர்பான ஆய்வுக் கற்கைகள் பலவும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை நீர்க்கசிவு இடம்பெறும் போக்கு கண்டறியப்படவில்லை.

குறித்த நீர்க்கசிவால் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 288 மில்லியன் கனமீற்றர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், சமனல வாவி மின்னுற்பத்தி நிலையத்தால் எதிர்பார்க்கப்பட்ட வருடாந்த மின்னுற்பத்தி இயலளவு மணிக்கு 405 ஜிகாவாற்றில் இருந்து மணிக்கு 70 ஜிகாவாற்றுக்கு குறைவடைந்துள்ளது.
நீர்த்தேக்கத்தின் வலதுகரைப் பிரதேசம் அதிகளவில் சிதைவடைந்து நீர்க்கசிவு ஏற்படக்கூடிய துளைகளுடன் கூடிய சுண்ணக்கல் படை காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளதுடன், நீர்க்கசிவு இடம்பெறும் போக்கு மேலும் அதிகரித்து ஆபத்தான நிலைமையை அடையக்கூடிய வாய்ப்புள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள சீராக்கல் முறைகள் தொடர்பாக ஆராய்ந்து நீர்த்தேக்கத்திலுள்ள நீரை முற்றுமுழுதாக அகற்றி முழுமையான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர், நீர்க்கசிவு இடம்பெறும் பகுதியைப் பொருத்தமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி மூடுவதற்காக இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. உள்ளூர் சேதன உரக் கொள்முதல் – 2021/2022 பெரும் போகம்
2021.07.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கமைய 2021/2022 பெரும் போகத்திற்குத் தேவையான சேதன உரம் உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்வதற்காக, தேசிய உரங்கள் செயலகத்தின் அனுமதிப்பத்திர உரிமம் கொண்ட உள்ளூர் உர உற்பத்தியாளர்களிடம் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனிக்கு தேவையான சேதன உரத்தை விநியோகிப்பதற்கான பெறுகைக் கோரல்கள், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய தெரிவு செய்யப்பட்டுள்ள சேதன உர உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. 1993 ஆம் ஆண்டு 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
தற்போது கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் பரவியுள்ள நிலைமையில் சர்வதேச இரத்தினக்கல் வர்த்தகத்தில் இரத்தினக்கற்களுக்கு நிலவிய கேள்வி குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது.

அதனால், தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபை இரத்தினக்கல் ஏற்றுமதி நடவடிக்கைகளின் போது அறவிடும் கட்டணத்தில் ஏதேனும் சலுகையைப் பெற்றுத்தருமாறும், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருப்பதால் மெய்நிகர் (Online) வழியாக இரத்தினக்கல் ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி வழங்குமாறும் இரத்தினக்கல் தொழிற்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதற்கமைய, குறித்த கட்டணத்தை திருத்தம் செய்வதற்கும், மெய்நிகர் வழியாக இரத்தினக்கல் மற்றும் தங்காபரணங்களை ஏற்றுமதி செய்வதற்கும் வசதிகளை மேற்கொள்வதற்கு இயலுமான வகையில் 1993 ஆம் ஆண்டு 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 2232/36 ஆம் இலக்க 2021 ஜூன் மாதம் 18 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. குடியியல் வழக்கு சட்டக்கோவை ஏற்பாடுகளின் பிரகாரம் கட்டணத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
குடியியல் வழக்கு சட்டக்கோவையின் ஏற்பாடுகளின் பிரகாரம் தரப்பினர் ஒருவர் அல்லது தரப்பினர்களுக்கிடையே நிகழும் அல்லது பட்டியல்படுத்தப்பட்ட சட்டத்தரணி மற்றும் சேவை பெறுநருக்கு இடையேயான அனைத்துக் கட்டணங்களும் நீதிமன்றப் பதிவாளரால் நிர்ணயிக்கப்படல் வேண்டும்.

இதற்கு முன்னர் குறித்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ள 994/7 ஆம் இலக்க 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டணத்தை சமகாலத்திற்கு பொருத்தமான வகையில் திருத்தம் செய்வதற்குரிய கட்டளைகள் விதிக்கப்பட்டு 2234/67 ஆம் இலக்க 2021 யூலை மாதம் 02 ஆம் திகதிய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தற்காலிகமாக முடக்க நேரிட்டமையால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000/- ரூபா கொடுப்பனவு செலுத்தல்
கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தற்காலிகமாக முடக்க நேரிட்டமையால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000/- ரூபா கொடுப்பனவு வழங்குவது உகந்ததென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேவையான நிதி மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், குறித்த கொடுப்பனவுகள் பிரதேச செயலாளர்களால் தெரிவு  செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும். அதற்குத் தேவையான வழிகாட்டல்கள் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்காக மாவட்டச் செயலாளர்களுக்கு தேவையான மேலதிக நிதியை விடுவிப்பதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. அமைச்சரவை அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளம் கொவிட் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தல்
பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கமைய, தற்போது நாட்டில் பரவி வரும் கொவிட்-19 தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குவதற்காகவும் கொவிட் நிதியத்தை வலுப்படுத்துவதற்காகவும் அமைச்சரவை அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளத்தை குறித்த நிதியத்திற்கு அன்பளிப்பு செய்வதற்கு அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.


Add new comment

Or log in with...