கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள வர்த்தகர்கள் தாமாக முன்வந்து தமது வர்த்த நிலையங்களை மூடுமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.
ஏனைய மாகாணங்களில், நகர் பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி சனநடமாட்டத்தை குறைத்து கொவிட்–19 பரவலை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். இதேபோன்று கிழக்கு மாகாணத்திலுள்ள வர்த்தகர்களும் தத்தமது வர்த்தக நிலையங்களை மூடி கொவிட் பரவலை தடுப்பதற்கு முன்வர வேண்டும்.
இலங்கையில் மேல் மாகாணத்தில் ஏற்பட்ட கொவிட்-19 அதிகரிப்பு கிழக்கு மாகாணத்திலும் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக அனைத்து மாவட்டங்களிலும் கொவிட்-19 தொற்றாளர்களின் வீதம் அதிகரித்துள்ளதோடு, மரண வீதமும் அதிகரித்துள்ளது.
சுகாதார அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் தங்களை அர்ப்பணித்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார்கள். வைத்தியசாலைகளை விஸ்திரப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டாலும் பொது மக்களின் பங்களிப்பு கிடைக்காமல் உள்ளதால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும்.
மக்கள் வெளியில் செல்ல வேண்டாமெனவும், வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை கடைப்பிடிக்குமாறும், தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை கடைப்பிடிக்காதவர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
தடுமல், காய்ச்சல் உள்ளவர்கள் வெளி இடங்களுக்கோ அல்லது காரியாலயங்களுக்குச் செல்லாமல் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், பிரத்தியேக வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெறாமல் அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று அதற்கான சிகிச்சைகளை பெற வேண்டும்.
இப் புதிய வைரஸ் தொற்று வீரியம் கூடியதாக காணப்படுவதால் ஒரு நிமிடத்திற்குள் அதிகமான தொற்றாளர்களுக்கு பரவக் கூடிய வாய்ப்பு உள்ளது. பொது மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும், சமூக இடைவெளியை பேணுமாறும் கேட்டுள்ளார்.
கடந்த 24 மணித்தியாலத்தில் புதன்கிழமை (18) கிழக்கு மாகாணத்தில் 442 கொவிட்-19 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 04 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 6,845 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 10,564 பேரும், அம்பாறை சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 6,497 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 5,314 பேருமாக கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 30,153 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொவிட்-19 இரண்டாவது அலையில் 26 பேரும், மூன்றாவது அலையில் 450 பேருமாக மொத்தமாக 476 பேர் மரணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(ஒலுவில் விசேட நிருபர்)
Add new comment