அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள்

அரசாங்க ஊழியர்களை நேற்று முதல் கடமைக்கு திரும்புமாறு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இத் தீர்மானத்தை எடுத்த போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சில விடயங்களை கவனத்திற் கொள்ளவில்லை என்பதையும் அச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

சில முக்கிய காரணங்களை தவிர்த்து மேற்கொள்ளப்பட்டுள்ள இத் தீர்மானத்திற்கு தமது சங்கம் இணங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள் தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும் அவர்களில் அதிகமானோர் ஒரு தடுப்பூசியை மாத்திரமே பெற்றுக் கொண்டுள்ளனர்.

மற்றும் அத்தகைய ஊழியர்களின் குடும்பத்தினர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமை மற்றுமொரு காரணமாகும். இதனால் அரசாங்க ஊழியர்களின் குடும்பங்களில் நோய் தொற்று பாதிப்பு ஏற்படலாம். அதற்கிணங்க இத்தீர்மானமானது எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளுக்கு காரணமாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசாங்க ஊழியர்களும் நேற்று முதல் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கான சுற்றறிக்கை கடந்த ஜூலை 30 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது. அதற்கிணங்க நேற்றைய தினம் பெரும்பாலான அரசாங்க ஊழியர்கள் கடமைக்கு திரும்பியிருந்தனர். அதற்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Add new comment

Or log in with...