கொரோனா: மூன்றாவது முறை தடுப்பூசி வழங்குகிறது இஸ்ரேல்

இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நாப்டாலி பென்னட் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளில் பொதுமக்களுக்கு இரு டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 3ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என முதல் நாடாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் நாப்டாலி பென்னட் மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் கடந்த வியாழக்கிழமை ஆற்றிய உரையில், தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பிலிருந்து தடுப்பூசிகள் பாதுகாக்கின்றன என்பதும் நிரூபணமாகியுள்ளது. அவ்வப்போது புதுப்பிக்க வேண்டிய காய்ச்சல் தடுப்பூசிகளைப் போல, கொரோனா தடுப்பூசிகளும் புதுப்பிக்கப்பட வேண்டும். அதன்படி, நாட்டில் ஏற்கனவே இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.

நாட்டின் ஜனாதிபதியான 61 வயது ஐசக் ஹொர்சாக் முதல் நபராக 3ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்கிறார். பொதுமக்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 3ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.

3ஆவது டோஸ் தடுப்பூசிக்கு அமெரிக்காவோ, ஐரோப்பிய ஒன்றியமோ இதுவரை அனுமதி வழங்கவில்லை. 3ஆவது டோஸ் உதவி செய்யும் என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் முதல் நாடாக 3ஆவது டோஸ் தடுப்பூசிக்கு இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் இஸ்ரேல் வெற்றி பெற்றபோதும் அங்கு மீண்டும் தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்த நிலையில் மக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...