Astra-Zeneca கொவிட் தடுப்பூசியின் 728,460 டோஸ்கள் எதிர்வரும் சனிக்கிழமை (31) கிடைக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, முதல் டோஸாக அதனைப் பெற்றுக் கொண்டு இரண்டாம் டோஸிற்காக காத்திருக்கும் 490,000 பேருக்கு முன்னுரிமையளித்து, அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
COVAX (கொவிட் தடுப்பூசிகளை பரிமாறிக் கொள்ளும்) வசதியின் கீழ் ஜப்பானிலிருந்து இவ்வாறு குறித்த Astra-Zeneca தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
இலங்கைக்கு முதன் முறையாக முதல் தொகுதி கொவிட் தடுப்பூசியாக இந்தியாவிடமிருந்து Astra-Zeneca தடுப்பூசி கிடைத்திருந்ததோடு, அதனைக் கொண்டே இலங்கை தனது கொவிட் தடுப்பூசி திட்டத்தை ஜனவரியில் ஆரம்பித்திருந்தது.
ஆயினும், கொரோனா வைரஸ் பரவல் நிலை உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா அதன் உள்ளூர் கேள்வி அதிகரிப்பு காரணமாக வெளிநாடுகளுக்கான Astra-Zeneca தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது.
இலங்கையில் சுகாதாரப் பிரிவினர் உள்ளிட்ட, கொவிட் பணியில் முன்னிலையில் நின்று செயற்படும் அனைவருக்கும் Astra-Zeneca தடுப்பூசியை வழங்கி நிறைவு செய்யப்பட்டதோடு, கொவிட் பரவல் அதிகம் காணப்பட்ட மேல் மாகாணத்திலும் Astra-Zeneca தடுப்பூசி செலுத்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சுகாதாரப் பிரிவினர் உள்ளிட்டோர் Astra-Zeneca வின் இரு டோஸ்களையும் பெற்ற போதிலும், அதனைப் முதல் டோஸாக பெற்ற சுமார் 5 இலட்சம் பேர், Astra-Zeneca தடுப்பூசியின் இரண்டாம் டோஸிற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து Astra-Zeneca தடுப்பூசியின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் ஏனைய நாடுகளில் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி வந்திருந்த நிலையில், தற்போது COVAX வசதி ஊடாக 728,460 டோஸ் Astra-Zeneca தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Astra-Zeneca தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றவர்களுக்கு, அதன் இரண்டாவது டோஸைப் பெறுவதற்காக, அவர்கள் பதிவு செய்த கையடக்கத் தொலைபேசிக்கு, உரிய திகதி மற்றும் நேரம் என்பன SMS மூலம் அறிவிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment