பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் முதலாவது தடுப்பூசியை பெற்று கொள்ளுமாறு பணிப்பு

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் சகல பாடசாலை அதிபர்கள், ஆசிரியரிகள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் கட்டாயம் கொவிட்-19 முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

பாடசாலைகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால் கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு முதலாவது சைனோபாம் தடுப்பூசி 50 ஆயிரம் வழங்கப்பட்டு 13 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் கடந்த சனிக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகின்றது. மக்கள் மிக ஆர்வத்துடன் சென்று தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.

ேஒவ்வொரு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கும் குறிப்பிட்டளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை தற்போது முடிவடைந்துள்ள நிலையில், மேலும் ஒரு தொகுதி சைனோபாம் தடுப்பூசி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு இரு தினங்களில் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும், நாற்பட்ட நோயாளிகள், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள், வைத்தியசாலை மற்றும் சுகாதார நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் உங்கள் அருகாமையிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்கள் அல்லது சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தடுப்பு மருந்து வழங்கும் இடங்களுக்குச் சென்று தடுப்பூசியினை ஏற்றிக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

கொவிட்- 19 தடுப்பூசி எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாதெனவும், மக்கள் பீதியடையாமல் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்றின் 03வது அலை மிக வேகமாக பரவி வருவதால் பொது மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும், தேவையில்லாமல் வெளி மாகாணங்களுக்கு செல்ல வேண்டாமெனவும் கேட்டுள்ளார். இது வரை திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 4869 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 7318 பேரும், அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 2534 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 3655 பேருமாக கிழக்கு மாகாணத்தில் 18376 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...