கைதான ரிஷாட்டின் மனைவி உள்ளிட்டோரை 72 மணி நேரம் விசாரிக்க அனுமதி

கைதான ரிஷாட்டின் மனைவி உள்ளிட்டோரை 72 மணி நேரம் விசாரிக்க அனுமதி-Hishalini Jude Kumar Death-Rishad Bathiudeen's Wife-Father-in-Law-Broker Detained

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி, தந்தை, சகோதரர் மற்றும் தரகர் ஆகிய நால்வரை மேலும் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) பொலிசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்று கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலங்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர்களை மேலும் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (26) முற்பகல் 10 மணிக்கு முன்னர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ரிஷாட் பதியுதீன் எம்.பி.யின் மனைவியை கிருலப்பனை பொலிஸ் நிலையத்திலும் அவரது மாமனார், அவரது மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோரை பொரளை பொலிஸ் நிலையத்திலும் வைத்து விசாரிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் எம்.பி.யின் வீட்டில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டிருந்த 16 வயது ஹிஷாலினி ஜூட் குமார் எனும் சிறுமி எரிகாயங்களுடன் மரணித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஆட்களை விற்பனை செய்தல், கொடுமைப்படுத்தல்/ சித்திரவதை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சிஹாப்தீன் ஆயிஷா (46), மொஹமட் சிஹாப்தீன் (70), சங்கர் என அழைக்கப்படும் பொன்னையா பண்டாரம் (64) ஆகியோர் நேற்று (23) பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, இதற்கு முன்னர் குறித்த வீட்டில் பணிபுரிந்த 22 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனின் மைத்துனரான மதவாச்சியைச் சேர்ந்த சிஹாப்தீன் இஸ்முதீன் (44) என்பவர் நேற்றையதினம் (23) பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர்களின் மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக நேற்றையதினம் (23) இரவு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் நேற்றையதினம் குறித்த அறிக்கையை பெற முடியவில்லை என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க மாத்தறை பிரிவுக்கான சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த தலைமையிலான குழுவினர் இன்றையதினம் (24) டயகம பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை பல்வேறு கோணத்திலும் முன்னெடுத்து வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சிறுமி தங்குவதற்கு ரிஷாட் பதியுதீனின் வீட்டின் பின்புறமாகவுள்ள அறையொன்று வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி பல்வேறு சிவில் அமைப்புகளும் கருத்துகளை வெளியிட்டுள்ளதோடு, நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...