14 இடங்களில் புதிதாக 30 டெல்டா திரிபு தொற்றாளர்கள் அடையாளம்

14 இடங்களில் புதிதாக 30 டெல்டா திரிபு தொற்றாளர்கள் அடையாளம்-30 More Person Identified With COVID19 Delta Variant-Total 68 Found So Far

- இதுவரை இலங்கையில் 68 தொற்றாளர்கள் அடையாளம்
- டெல்டா: 1,000 மடங்கு செறிவானது
- டெல்டா தொடர்பில் அறிய வேண்டிய 5 விடயங்கள்

வவுனியா, முல்லைத்தீவு, பேருவளை உள்ளிட்ட 14 இடங்களில் வேகமாக பரவும் டெல்டா கொவிட் திரிபு தொற்றைக் கொண்ட மேலும் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் இதுவரை கொவிட்-19 டெல்டா திரிபின் தொற்றைக் கொண்ட 68 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நாட்டின் ஒரு சில இடங்களில் 'Delta' திரிபின் தொற்றைக் கொண்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது புதிதாக அடையாளம் காணப்பட்ட 30 பேருடன், டெல்டா திரிபு தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள், கொழும்பின் கோட்டை, கொலன்னாவை, அங்கொடை, நவகமுவ, மஹபாகே, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, இரத்மலானை, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 14 இடங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 68 பேருக்கு மேலதிகமாக சமூகத்தில் அடையாளம் காணப்படாத நபர்களும் டெல்டா திரிபுடன் இருப்பதற்கு வாய்ப்பிருக்கலாம் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எனவே, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதே இதற்கான ஒரே தீர்வு என அவர் சுட்டிக்காட்டினார். அவ்வாறில்லையாயின் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருகும் வாய்ப்பு அதிகரிக்கலாமென அவர் தெரிவித்தார்.

டெல்டா தொற்றைக் கொண்ட முதலாவது நபர் கொழும்பு, தெமட்டகொடையிலுள்ள ஆராமய பிளேஸ் பகுதியில் கடந்த ஜூன் மாதம் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெல்டா: 1,000 மடங்கு செறிவானது
சாதாரண கொவிட் வைரஸ் தொற்றாளர்களிலும், சுமார் 1,000 மடங்கு வைரஸ் செறிவை டெல்டா தொற்றாளர்கள் கொண்டிருப்பார்கள் என, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

 

 

இதன் மூலம் அதன் பரவலின் வேகம் மிக மிக அதிகமாக இருக்குமென அவர் தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

 

 

டெல்டா திரிபு தொடர்பில் 5 விடயங்கள்

  1. ஏனைய திரிபுகளிலும் பார்க்க பரவல் வேகம் அதிகமானது.
  2. தடுப்பூசி பெறாதவர்களுக்கு மிக பாதிப்பானது.
  3. சமூகத்திற்குள் வேகமான பரவலொன்றை உருவாக்கும் வாய்ப்புக் கொண்டது.
  4. டெல்டா தொடர்பில் அறிய இன்னும் பல விடயங்கள் உள்ளன.
  5. தடுப்பூசி பெறுவதே டெல்டாவுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு

Add new comment

Or log in with...