ஹிஷாலினி மரணம் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் நாயகம் தலைமையில் சட்ட ஆலோசனை குழு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த 16 வயது ஹிஷாலினி ஜூட் குமார் எனும் சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு சட்ட ஆலோசனை வழங்க, பிரதி சொலிசிட்டர் நாயகம் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகளை இன்று (22) சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு வரவழைத்த, சட்டமா அதிபர் சஞ்சய இராஜரத்தினம், பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் தலைமையிலான குழுவொன்றை இதற்காக நியமித்துள்ளார்.

குறித்த குழு, இவ்விசாரணைகள் தொடர்பிலான சட்ட ஆலோசனைகளை பொலிசாருக்கு வழங்கும்.

இதேவேளை, ஹிஷாலினி உள்ளிட்ட இவ்வாறான பாதிப்புகளுக்குள்ளான அனைத்து சிறார்களுக்காகவும் அஞ்சலி செலுத்தும் பிரதான நிகழ்வு இன்றைய தினம் டயகம மேற்கு தோட்ட வளாகத்தில் மாலை 6.30 மணியளவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு - பொரளை, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்த 16 வயதும் 8 மாதங்களுமான குறித்த சிறுமி, கடந்த ஜூலை 03ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் (15) மரணமடைந்திருந்தார்.


Add new comment

Or log in with...