14 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன், தாய் கைது

பதினான்கு வயது நிரம்பிய சிறுமியை கர்ப்பிணியாக்கிய 25 வயதுடைய இளைஞனை மடுல்சீமைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். அத்துடன் சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயாரையும் பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சிறுமிக்கு வயிற்று நோய் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற வேளையில், சிறுமி மூன்று மாத கர்ப்பிணி என தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் தாய் அவளை ஹொப்டன் தோட்டத்திலுள்ள உறவினர் வீடொன்றில் மறைத்து வைத்திருந்தார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் பிரதேச குடும்பநல உத்தியோகத்தர் அறிந்து, மடுல்சீமை பொலிஸ் நிலையத்தின் மகளிர் பிரிவிற்கு புகார் செய்துள்ளார்.

இதனையடுத்து மடுல்சீமை பொலிஸார் ஹொப்டன் தோட்டத்திற்கு சென்று, சிறுமியை விசாரித்துள்ளனர்.

இதன்போது இளைஞன் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இதனைத் தொடர்ந்து சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் தாயை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கர்ப்பம் தொடர்பான வைத்திய அறிக்கையைப் பெற சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன், விசாரணையின் பின்னர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை தினகரன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...