4 மாதங்களுக்கான உரம் கையிருப்பில்

பாராளுமன்றத்தில் மஹிந்தானந்த தெரிவிப்பு

விவசாயிகளுக்கு எதிர்வரும் 04 மாதங்களுக்கு தேவையான உரம் எம்மிடம் கையிருப்பிலிருக்கின்றது. எனினும் தனியார் உர நிறுவனங்கள் அதனை விநியோகிக்காமல் பதுக்கிவைத்திருந்ததாலேயே உரப்பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.     இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சிறுபோகத்துக்கு போதுமான உரம் எம்மிடம் இருக்கின்றது என்பதை நான் தொடர்ந்து தெரிவித்து வந்தேன். என்றாலும் உரம் இல்லையென்று விவசாயிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவம் வழங்கி வருகின்றன. விவசாயிகள் போராட்டம் நடத்தும் மாவட்டங்களுக்கு நான் நேரடியாக சென்று, அங்கு உரம் தட்டுப்பாடு இருக்கிறதா என தேடிப்பார்த்தபோது, அந்த மாவட்டங்களில் அதிகமான விவசாய சேவை மத்திய நிலையங்களுக்கு தேவையான உரம் விநியோகிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் உர நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் உரம் கிடைக்கவில்லை என்றே எமக்கு தெரிவித்திருந்தன. அதனால் விவசாயிகளுக்கு உரிய நேரத்துக்கு உரம் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக எமக்கு கிடைத்த தகவலொன்றின் பிரகாரம் நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் உர நிறுவனங்களில் ஒரு இலட்சத்து 02 ஆயிரம் மெற்றிக்தொன் உரம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உரம் இல்லையென தெரிவித்துக்கொண்டு உரத்தை விநியோகிக்காமல் இருந்ததே உரப்பிச்சினைக்கு காரணமாகும். அதனால் நிறுவனங்களிடமிருக்கும் உரங்களை ஒருவாரத்துக்குள் விவசாய சேவை மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்க வேண்டுமென நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கி இருக்கின்றோம். அதன் பிரகாரம் எதிர்வரும் 04 மாதங்களுக்கு எந்தவொரு விவசாயத் துறைக்கும் உரம் பற்றாக்குறை இல்லாமல் விநியோகித்து வருகின்றோம். தனியார் நிறுவனங்கள் உரத்தை பதுக்கிவைத்திருந்ததாலே உரப் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது.

அரசாங்கம் இரசாயன உரம் இறக்குமதி செய்வதை தடைசெய்து, சேதன பசளை எதிர்வரும் பெரும்போகத்துக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். இதனால் இரசாயன உரம் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இதுவரை மேற்கொண்டுவந்த உர மாபியா இல்லாமல் போகும் அபாயம் இருக்கின்றது. இந்த நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கும் ஊடகங்ளுக்கும் பாரியளவில் செலவழித்து வருகின்றன. அதனாலேயே அரசியல் கட்சிகள் விவசாயிகளின் போராட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்கி வருகின்றன. இதுவே இந்த பிரச்சினைக்கு பிரதான காரணம்.

இரசாயன உர பாவனையால் எமது நாட்டில் அதிகளவானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று கடந்த 02 வருடங்களில் இரசாயன உரம் இறக்குமதி நூற்றுக்கு 300 வீதம் அதிகரித்திருக்கின்றது. அதனால் உரப்பிரச்சினைக்கு பின்னால் இரசாயன உர இறக்குமதியாளர்களும் அவர்களிடமிருந்து பணம் பெறுபவர்களுமே இருக்கின்றனர் என்றார்.

ஷம்ஸ் பாஹிம் சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...