இஸ்லாமிய வஹாபிஸ அடிப்படைவாதம் இன்னமும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை

BBS பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சாடல்

இஸ்லாமிய மதத்தின் பெயரால் கடந்த காலத்தில் நாட்டில் மேலோங்கிய வஹாபிஸ, அடிப்படைவாத செயற்பாடுகள் இன்னமும் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. எந்தவொரு தரப்பினராலும் வெளிப்படையாக இனங்கண்டு கொள்ளமுடியாத பல்வேறு கோணங்களில் அவை இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர்  தெரிவித்தார்.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், காதி நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் அதன் மூலம் வழங்கப்படும் தீர்ப்புக்கள் போன்றவை அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளப்படுவதற்கான அழுத்தத்தை வீடுகளுக்குள்ளேயே தோற்றுவிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, இராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று (05) திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாடளாவிய ரீதியிலுள்ள பாரம்பரிய முஸ்லிம்கள் பலரின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறோம். இலங்கையில் வியாபித்துவரும் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருந்தோம்.

தற்போதும் பலராலும் கண்டறிய முடியாதவகையில் இஸ்லாமிய மதத்தின் பெயரால் அடிப்படைவாதத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கத்தின் கீழ், சில அரசியல் தலைமைகளின் துணையுடன் நாட்டின் முன்னெடுக்கப்பட்டுவந்த தீவிரவாத மற்றும் அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய நாம், இவற்றை முழுமையாக இல்லாதொழிப்பதற்கும் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் புதிய தலைமைத்துவமொன்று அவசியம் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தோம்.

அதற்கமைவாக கடந்த 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலின்போது பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகள் மூலம் தெரிவான ஜனாதிபதி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கு ஏற்றவகையிலான சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவார் என்று எம்மைப்போன்றே மேலும் பலர் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.ஆனால் புதிய தலைமைத்துவத்தின் கீழ் இத்தகைய சில செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் கூட, வேறுபல வழிகளிலும் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ‘ஜிஹாத்’ கொள்கையானது பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையப்படுத்தியதாக இருக்கும் அதேவேளை, அது உலகளாவிய ஜிஹாத் கொள்கையாக மாற்றமடையக்கூடிய போக்குகளும் காணப்படுகின்றன.

அதேபோன்று அண்மையில் முஸ்லிம் விவாக, விகாரத்துச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்த யோசனையானது கடந்த ஆட்சிக்காலத்தில் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலரும் அச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள்.

குறிப்பாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் திருமண வயதெல்லை உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் மாற்றப்பட வேண்டும் என்று நாமும் குறிப்பிட்டோம். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வயதில் பெண்கள் திருமணம் செய்வதென்பது பொதுச்சட்டத்தைப் பொறுத்தவரை குழந்தைத் திருமணமாகும். அது சிறுவர் துஷ்பிரயோகமாகவே கருதப்படும். ஆகவே நாட்டில் இவ்வாறான இரு சட்டங்கள் பேணப்படுவதை விடவும், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் உள்ள விடயங்களைப் பொதுச்சட்டத்திற்கு அமைவாகத் திருத்தியமைக்கப்பட வேண்டும். எனினும் அதனைத் திருத்துவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்திற்கு உலமா சபை எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றது. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், காதி நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் அதன்மூலம் வழங்கப்படும் தீர்ப்புக்கள் போன்றவை அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளப்படுவதற்கான அழுத்தத்தை வீடுகளுக்குள்ளேயே ஏற்படுத்துகின்றன.

அடுத்ததாக சில மாதங்களுக்கு முன்னர் நிகாப் மற்றும் புர்காவைத் தடைசெய்வதற்கான யோசனை அமைச்சர் சரத் வீரசேகரவினால் கொண்டுவரப்பட்டது. அந்த யோசனைக்குத் தற்போது என்ன நடந்தது? முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் பேசுபொருளானதன் பின்னர் அவ்விடயம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...