சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானம் இல்லை

சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் கிடையாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துச் செல்லும் நிலையில் தொடர்ந்தும் நிறுவனங்களை நடத்திச் செல்ல வேண்டுமெனில் சமையல் எரிவாயு ஒன்றின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசாங்கத்தை கோரியுள்ளன.

அந்த நிலையில் விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவும் அதன் யோசனையை முன் வைத்துள்ளது.மேற்படி அமைச்சரவை உப குழு விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் வர்த்தக அமைச்சில் கூடி கலந்துரையாடியுள்ளது.

அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழகப்பெரும, மஹிந்த அமரவீர, உதய கம்மன்பில மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் அக்குழுவில் அங்கம் வகிப்பதுடன் நாட்டின் பிரதான இரண்டு எரிவாயு நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டிலும் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என எரிவாயு நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...