அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 43(1) இற்கு அமைய, அமைச்சரவையானது பாராளுமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய ஒன்றாக இருக்கின்ற நிலையில், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளரினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, அமைச்சரவையின் அனுமதியின்றி வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் எரிபொருள் விலையேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள, குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசியலமைப்பின் 27 (1) இற்கு அமைய அரச கொள்கைகளை வழிநடாத்திச் செல்வது தொடர்பான அடிப்படைத்தன்மை மீறப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பின் 28ஆம் பிரிவிற்கு அமைய அடிப்படை கடமையிலிருந்து விலகியுள்ளதாலும், அதற்கமைய அரரசியலமைப்பின் 53ஆம் பிரிவிற்கு அமைய, மொழியப்பட்ட பிரமாணம் மீறப்பட்டுள்ளதாலும் இவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உலக சந்தையில் எரிபொருட்களின் விலை மிகவும் குறைவாகக் காணப்பட்ட 2020 ஜனவரி மாத்திலிருந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாக எரிபொருட்களின் விலையை குறைக்காது, மிக உயர் மட்டத்தில் பேணிய நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் அரசாங்கம் அடைந்த இலாபம் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கவில்லை என்பதாலும்,
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடைந்தமை தொடர்பான சலுகையை, அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டமை,
அதன் விலை சலுகையின் அடிப்படையில் இரண்டு வருடங்கள் வரை எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என வழங்கிய உத்தரவாதத்தை நிறைவேற்றாமை,
அதன் விலை குறைப்பு சலுகையை எரிபொருள் விலை அதிகரிக்கும்போது பயன்படுத்த, அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள, எரிபொருள் விலையை நிலையாக பேணுவதற்கான நிதியத்திற்கு நடந்தது என்ன என்பது தொடர்பில், பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் அறிவிக்க தவறியமை தொடர்பிலும்,
அதன் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் பெற்ற இலாபத்தை பயன்படுத்தி, அரச வங்கிகளில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றுள்ள கடனிலிருந்து அதனை விடுவிப்பதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமை,
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அதனுடன் இணைந்தவாறு அனைத்து பொருட்களின் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளமை, பணவீக்கம் அதிகரித்துள்ளமை உள்ளிட்ட காரணங்களால் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், பொருளாதார ரீதியில் மேலும் துன்பத்திற்குள்ளாகியுள்ளதாலும்,
உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக ஏற்றுமதி மற்றும் மொத்த பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதாலும்,
அரசாங்கத்தை அமைக்கும் போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, அரசாங்க கொள்கைகள் மற்றும் இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மீறியுள்ளதுடன், அடிக்கடி வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியமையினாலும், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தொடர்பில், கௌரவ சபையின் விஸ்வாசம் முழுமையாக இல்லை என்பதாலும், தொடர்ந்தும் வலுசக்தி அமைச்சராக அப்பதவியில் செயற்படுவதற்கான திறமையில்லை என, இப்பாராளுமன்றத்தில் யோசனையை நிறைவேற்றுகிறோம்.
என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Add new comment