- முழுமையான தடுப்பூசி செலுத்திய இலங்கையருக்கு சலுகை
வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, அது தொடர்பான அதிகாரம் கொண்ட அதிகாரியான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகள் இரண்டையும் (முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருத்தல்) பெற்றிருந்து, அத்தடுப்பூசி செலுத்தப்பட்டு 14 நாட்கள் நிறைவு செய்த பின்னர் அவர்கள் இலங்கை திரும்புவார்களாயின், அவர்கள் தங்களது வீடுகளில், கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இந்தியா, வியட்நாம், தென்னாபிரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து கடந்த 14 நாட்களுக்குள் சென்று, நாடு திரும்பும் இலங்கையர் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள், முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தாலும் இந்நடைமுறை அவர்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த (05.11.2021) சுற்றறிக்கையில், கொவிட்-19 தடுப்பூசி பெற்றிருந்தாலும், இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் உள்ளிட்ட, வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்கள் ஹோட்டலில் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமென அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தில், கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு, ஒரு நாள் மாத்திரம் கட்டாய தனிமைப்படுத்தல் விதிக்கப்பட்டிருந்ததோடு, PCR சோதனைக்கு அமைய வீடு சென்று, 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய,
- உரிய PCR சோதனை அறிக்கை (ஆங்கிலம்/ ஆங்கில உறுதிப்படுத்தல்)
- கொவிட்-19 தடுப்பூசி அறிக்கை (ஆங்கிலம்/ ஆங்கில உறுதிப்படுத்தல்)
- வந்திறங்கிய முதல் நாளன்று, மட்டம் 1 நிலை ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தல் மற்றும் PCR சோதனை செய்யப்படும்.
- அவர்களுடன் வரும் 2 - 12 வயது சிறுவர்களுக்கு PCR சோதனை மேற்கொள்ளப்படும்.
- அவர்களுடன் வரும் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு PCR சோதனை அவசியமில்லை
- PCR முடிவுகளுக்கமைய ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.
- தனிப்பட்ட போக்குவரத்தின் மூலம் வீடு திரும்ப வேண்டும். (பொதுப் போக்குவரத்திற்கு அனுமதியில்லை)
- வீடு திரும்பியதும் உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் ஈடுபடல் (பிரதேச சுகாதாரப் பிரிவு அதனை கண்காணிக்கும்)
Add new comment