உத்தரவை மீறி கப்பலிலிருந்து வீழ்ந்த பொருட்களை கொண்டு சென்ற 8 பேர் கைது

உத்தரவை மீறி கப்பலிலிருந்து வீழ்ந்த பொருட்களை கொண்டு சென்ற 8 பேர் கைது-8 Suspects Arrested for Collect Debris of X-Press Pearl Despite Warning

- பயணக்கட்டுப்பாட்டை மீறியமை தொடர்பிலும் குற்றச்சாட்டு

தீப்பிடித்துள்ள, X-Press Pearl கப்பலிலிருந்து வீழ்ந்து கரையொதுங்கிய பொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டு தொடர்பில், 8 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பயணக்கட்டுப்பாட்டை மீறி இவ்வாறு கடற்கரைக்குச் சென்று பொருட்களை சேகரித்துச் சென்ற, சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த X-Press Pearl கப்பலிலிருந்து வீழ்ந்து கரையை அடையும் கொள்கலன்கள் மற்றும் அதன் பாகங்கள், அதிலுள்ள பொருட்களை கையாள்வதை தவிர்க்குமாறு பொலிஸார் மற்றும் அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், ஒரு சிலர் அதனை மீறி செயற்பட்ட நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பமுணுகம, துன்கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் குறித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, லொறியொன்றுடன் அப்பொருட்களை போக்குவரத்து செய்த 2 சந்தேகநபர்கள் துன்கல்பிட்டிய  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பமுணுகம பொலிஸாரால் 3 சந்தேகநபர்களும், கொச்சிக்கடை பொலிஸாரால் 3 சந்தேகநபர்களும் இவ்வாறு பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு செயற்பட்ட பலர் தொடர்பில், சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களின் அடிப்படையில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...