தம்புத்தேகம பொருளாதார நிலையத்துக்கு 12 இலட்சம் கிலோ மரக்கறி, பழவகைகள் வருகை

- அனைத்து பொருளாதார மத்தியநிலையங்களும் நாடளாவிய பயணக்கட்டுப்பாட்டில் மூடப்பட்டிருக்கும்

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கடந்த மூன்று தினங்களாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டதால், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு   நேற்று (17)  நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் அதிகளவிலான மரக்கறிகளும் பழவகைகளும் வந்ததாக பொருளாதார மத்திய நிலைய வியாபார சங்க தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் மே 21 - 25 மற்றும் மே 25 - 28 காலப் பகுதியில் நாடளாவிய பயணத்தடை அமுலில் இருக்கும் காலப் பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்தியநிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என, இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எனப் பலரும் தம்புத்தேகம மத்திய நிலையத்திற்கு வருகை தந்ததால் நேற்று (17) அதிகாலை 4.00 மணி தொடக்கம் நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஏனைய நாட்களில் 8 - 10 இலட்சம் கிலோ மரக்கறிகளும் பழவகைகளும் வருவதுண்டு. ஆனால், நேற்றய தினம் (17) 11 - 12 இலட்சம் கிலோமரக்கறி, மற்றும் பழவகைகள் வந்ததாகவும் தலைவர் தெரிவித்தார். மலையக மரக்கறி மற்றும் பழவகைகள் கணிசமானளவு வந்ததால், அவைகள் அனைத்தையும் எவ்வித தங்குதடையுமின்றி  பெற்றுள்ளதாகவும்  பழவகைகளின் பற்றாக்குறை காரணமாக ஒரு குறிப்பிட்டளவு விலை உயரக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(அநுராதபுரம் மேற்கு தினகரன்,தலாவ குறூப்  நிருபர்கள்)


Add new comment

Or log in with...