திருகோணமலை பொது வைத்தியசாலையில் 5 தாதியர்களுக்கு தொற்று

திருகோணமலை பொது வைத்தியசாலையில் 5 தாதியர்களுக்கு தொற்று-17 COVID19 Patients Including 5 Nurses Identified in Trincomalee Today

- திருகோணமலையில் இன்று மாத்திரம் 17 பேர் அடையாளம்
- ஆளுநரால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை மாத்திரம் 17  பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதனடிப்படையில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏழு பேருக்கும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று பேரும் குச்சவெளி பிரதேசத்தில் 4 பேரும் கிண்ணியா பிரதேசத்தில் இருவரும், கந்தளாயில் ஒருவரும் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றி வரும் தாதியர்கள் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் இருவர் கொவிட்  தடுப்பூசி பெற்றவர்கள் என, வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை நகர்ப்பகுதியில் நேற்றைய தினம் இனங்காணப்பட்ட 3 பாடசாலைகளிலிருந்து ஆசிரியர் இருவரும் மாணவர் ஒருவருக்கும் தொற்று  கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அனைத்து கல்வி நிலையங்களை மூடுவதற்காக ஆலோசித்து வருவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் மேலும் குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் பரவும் அபாயத்தை சுகாதாரத் துறை அடையாளம் கண்டுள்ளதால் திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

வீதித் தடைகளை ஏற்படுத்தி, அத்தியாவசிய விடயங்களைத் தவிர்ந்த ஏனைய பயண நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபடுவதைத் தடுக்குமாறு ஆளுநர் நேற்றையதினம் (23) பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல் சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...