கொவிட் உடல் அடக்கம்; முழுச் செலவும் அரசு ஏற்கும்

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் நபர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு இரணைதீவு பிரதேசம் உகந்ததென அடையாளம் காணப்பட்டுள்ளது. அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டல் நேற்று வெளியிடப்பட ஏற்பாடாகியிருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொவிட்19 தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானிக்கு அமைவான வழிகாட்டல் தயாராகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கொவிட்19 தொற்றுக்குள்ளாகி இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்ட போதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் இதுவரை அறிவிக்கப்படாதது குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பில் நேற்று முன்தினம் நடந்த கோவிட்19 குழுக் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்பட்டது. இந்த சடலங்களை இரணைதீவில் நல்லடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அடிப்படை வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு இன்றைக்குள் அது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கான பூர்வாங்க பணிகள் யாவும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எந்த சடலத்தையும் ஏற்க தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இரணைதீவு இராணுவத்திற்குட்பட்ட பகுதியாகும். இங்கு சுமார் 200 பேர் வாழ்கின்றனர். இந்த தீவுக்கு கொவிட்19 தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கத்திற்காக கொண்டு செல்வது சிரமமானதாக அமையாதா? எனவும் வினவப்பட்டது.

இதற்கு பதிலாக வேறு இடமொன்றை தெரிவு செய்தால் என்ன? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், இரணைதீவு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானபூர்வமாக சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

சடலத்தை எவ்வாறு கொண்டு செல்வது அதற்கான பொதிகள் எவ்வாறு அமைப்பது என்பன குறித்தும் இதனுடன் தொடர்பு படும் நபர்கள் குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சகல தரப்பிற்கும் இது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

அரசியல் ரீதியிலா அல்லது நிபுணர் குழுவின் முடிவின்படியா? இந்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என வினவப்பட்டதற்கு பதிலளித்த அமைச்சர்,

இதில் எந்த அரசியல் ரீதியான முடிவும் கிடையாது. முழுமையாக நிபுணர் குழுவினாலே முடிவுகள் எடுக்கப்படுகிறது என்றார்.

கேள்வி: சடலங்களை எடுத்துச் செல்வதற்கான செலவுகளை அரசாங்கமா ஏற்கிறது ?

பதில்: முழுச் செலவையும் அரசாங்கமே ஏற்கிறது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...