கொவிட்-19: முன்னாள் சபாநாயகர் WJM லொக்கு பண்டார காலமானார்

கொவிட்-19: முன்னாள் சபாநாயகர் WJM லொக்கு பண்டார காலமானார்-WJM Lokubandara Passed Away While Receiving Treatment for COVID19 at IDH

முன்னாள் சபாநாயகர்களில் ஒருவரான டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார (79) காலமானார்.

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று (14) மாலை மரணமடைந்துள்ளார்.

இலங்கையின் 18ஆவது சபாநாயகரான, டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (14) மரணமடைந்துள்ளார்.

விஜயசிங்க ஜயவீர முதலியன்சலாகே லொக்குபண்டார 1941ஆம் ஆண்டு, ஓகஸ்ட் 05ஆம் திகதி (1941.08.05) அப்புத்தளையில் பிறந்தார்.

முதன் முதலில் 1977ஆம் ஆண்டு ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்தார்.

இறுதியாக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், 2004 - 2010 ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலப் பகுதியில் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகராக கடமையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2010 - 2015 காலப் பகுதியில் சப்ரகமுவ மாகாண ஆளுநராக கடமையாற்றியிருந்தார்.

ஒரு சட்டத்தரணியான அவர், பல்வேறு புத்தகங்கள் மற்றும் பாடல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...