தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கைது

தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கைது-Escaped Eheliyagoda COVID19 Patient Arrested

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனானை சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவை, மீதொட்டமுல்ல, விகாரை வீதியிலுள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரியும் 43 வயதான குறித்த நபருக்கு, கடந்த ஜனவரி 13ஆம் திகதி  மேற்கொண்ட  PCR பரிசோதனையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 17ஆம் திகதி புனானை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எஹலியகொடை, அதாகொட பிரதேசத்தச் சேர்ந்த, ஷெல்டன் பிரேமரத்ன எனும் நபர் எனவும், அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, இரண்டாவது கொரோனா அலையைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி முதல்  இவ்வாறு 14 கொரோனா தொற்றாளர்கள் ராகமை, சாலாவ, வெலிசறை, வெலிக்கந்த, கல்லேல்ல, IDH, புனானை ஆகிய சிகிச்சை நிலையங்களிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமையான அல்லது குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த நபர் நேற்று (19) இரவு 7.30 மணியளவில், புனானை சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற நலையில், இன்று (20) முற்பகல் அவர், எஹலியகொட பொலிஸ் பிரிவிலுள்ள பெல்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த நபர் வாழைச்சேனையிலிருந்து எஹலியகொடை வரை வந்த விதம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நபர் சிகிச்சைக்கு அனுபி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது சிகிச்சையின் பின்னர் அவருக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்டதிட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, அஜித் ரோஹண தெரிவித்தார்.


Add new comment

Or log in with...