தேடப்பட்டு வந்த கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு

தேடப்பட்டு வந்த கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு-COVID19 Patient-Fled From Home Found-Makola

- வீட்டிலிருந்த மூவர் தனிமைப்படுத்தலில்

மாகொல வடக்கு பிரதேசத்திலுள்ள வீடோன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றிருந்த கொரோனா தொற்றாளர், அதே பிரதேசத்தில் மற்றுமொரு வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய இன்று (27) முற்பகல் குறித்த நபரை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவரது காதலி எனத் தெரிவிக்கப்படும் பெண் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் அவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபரை சிகிச்சைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை குறித்த பெண் மற்றும் அவரது வீட்டின் மேல் மாடியில் வசித்து வரும் பெற்றோர் ஆகிய மூவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிகிச்சையின் பின்னர் குறித்த நபர் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

தப்பிச் சென்றவர், தனிமைப்படுத்தலில் உள்ளவர் எனத் தெரிந்தும் அவருக்கு தங்க இடம் வழங்கப்பட்டுள்ளதா, என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு இடம்பெற்றிருப்பின், அது தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய, குறித்த நபர் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த, மாகொல வடக்கு, தேவாலய வீதியில் வசிக்கும் நிமேஷ் மதுஷங்க எனும் குற்றமொன்றிற்காக சிறையில் வைக்கப்பட்டு திரும்பிய, போதைப்பொருளுக்கு அடிமையான 22 வயது நபரே நேற்று (26) பிற்பகல் இவ்வாறு தப்பிச் சென்றிருந்ததாக, அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...