கரும்புச் செய்கையாளர்களின் கால் நூற்றாண்டுச் சவால்கள்

* காணிகளைக் காப்பாற்றிக் கொள்ள அம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகள் நடத்துகின்ற சீவனோபாய போராட்டம்

ழில் செய்பவர்கள் எவராயினும் இலாபத்தை எதிர்பார்த்து களத்தில் இறங்குவதுதான் வழமை. நிலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மாத்திரம் விவசாயம் செய்யும் நிலையில் உள்ளோரைப் பற்றி அநேகர் அறிந்திருக்கச் சந்தர்ப்பம் இருந்திருக்காது. அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள், தங்களது காணிகளைக் காப்பாற்றிக் கொள்ளவே கரும்புச் செய்கையில் ஈடுபடுகின்றனர்.

பெரும்பாலும் இவர்களில் பலர், வேளாண்மை செய்வதற்கு விருப்புடையோராக இருந்தும் பெரிதாக ஆதாயம் இல்லாத கரும்புச் செய்கையில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்கை பண்ணப்படாதுள்ள காணிகளை, ஹிங்குராணை சீனிக் கூட்டுத்தாபனம், விருப்பமுடையோருக்கு குத்தகைக்கு வழங்கி கரும்புச் செய்கையை ஊக்குவித்து வருகிறது. எனினும் காணியின் உரிமை, கூட்டுத்தாபனத்தால் ஆவணம் வழங்கியோரிடமிருந்து பறிக்கப்படாதுள்ளமை குறிப்பி டத்தக்கது.

இது குறித்து அம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகளிடமிருந்து பல விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இம்மாவட்டத்தில் சுமார் 25000 ஏக்கரில் கரும்புச் செய்கை பண்ணப்படுகிறது. எக்கல்ஓயா, சிறுநீத்தை, நுரைச்சோலை, கல்மடு, நீத்தை என ஐந்து வலயங்களாக இந்த 25000 ஏக்கர்களும் பிரிக்கப்பட்டுள்ளன.

வேளாண்மைச் செய்கை ஏக்கர் கணக்கில் கணிப்பிடப்படுவதைப் போன்று, கரும்புச் செய்கை ‘கண்டம்’ என்ற பெயரில் மதிப்பிடப்படுகிறது. இரண்டரை ஏக்கர் நிலம் கண்டம் எனப்படுகிறது. ஒரு கண்டத்தை உழுது நடுகை செய்வதற்கு சுமார் 25000 ரூபா செலவிடப்பட்டு செய்கை ஆரம்பமாகும். வேளாண்மையைப் போன்று அடிக்கடி பசளை, எண்ணெய் விசிறும் தேவைகள் மற்றும் களை பிடுங்குதல் வேலைகள் ஏற்படாத நிலையிலும் நீர்ப்பாசனம் நேர்த்தியான முறையில் இடம்பெறுவது அவசியம்.

அறுவடைக்கு பதினொரு மாதங்கள் தேவைப்படுவதால் வருடத்துக்கு ஒரு முறைதான் கரும்புச் செய்கையை மேற்கொள்ள முடிகிறது.விவசாயிகளிடம் நிதியில்லாத நிலையில், ஹிங்குராணை சீனிக் கூட்டுத்தாபனம் கரும்புச் செய்கை முதல் அறுவடை வரைக்குமான செலவுகளுக்கு கடன் வழங்கி, பின்னர் கொள்வனவு செய்யும் போது பழைய கடன்களை கழித்த பின்னரே மீதிப் பணம் வழங்கப்படுகின்றது.

பன்றி, யானை இவையிரண்டும் இப்பயிரின் எதிரிகள். அதிலும் பன்றித் தாக்கத்திற்கு நஷ்டஈடு வழங்கப்படுவதில்லை என்பதால், விவசாயிகள் கரும்புச் செய்கையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். யானையால் கரும்புச் செய்கைக்கு ஏற்பட்ட அழிவுகளுக்காக, ஹிங்குராணை சீனிக் கூட்டுத்தாபனம் நஷ்டஈடு வழங்குகின்றமை விவசாயிகளுக்கு ஆறுதலளிப்பதாகவே உள்ளது.

சாதாரணமாக ஒரு கிலோ கரும்பை 5.50 ரூபாவிற்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்கிறது சீனிக் கூட்டுத்தாபனம். எனினும் தொன் கணக்கிலேதான், கரும்பு கொள்வனவு செய்யப்படுகிறது. ஒரு தொன் கரும்பு ரூபா 5550 வுக்கு கொள்வனவு செய்யப்படும். சாதாரணமாக ஒரு கண்டத்தில் பத்து தொன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு சுமார் ரூபா 550000 விற்கப்பட்டாலும், செலவுகளைக் கழித்து மூன்று இலட்சம் ரூபா வருடமொன்றுக்கு வருமானமாகப் பெறப்படுகிறது.

இதை,மாத வருமானமாகக் கணிப்பீடு செய்யின் முப்பதாயிரம் ரூபாவாகவே உள்ளது. இத்தனை சிரமம், காலதாமதங்களையும் பொருட்படுத்தாது, இவர்கள் கரும்பு செய்வதற்கான காரணம், தங்கள் காணிகளைப் பாதுகாப்பதற்கே ஆகும். 1965 ஆம் ஆண்டிலிருந்து ஹிங்குராணை சீனிக் கூட்டுத்தாபனத்தில் தொழிலாளர்களாகப் பணியாற்றி யோருக்கு கரும்புக் காணிகள் பங்கிடப்பட்ட போதும், காணிக்கான முழு உரித்தும் கூட்டுத்தாபனத்திடமே உள்ளது.

மேலும் நுரைச்சோலை, அம்பலத்தாறு பகுதிகளில் காடு வெட்டி, வேளாண்மை செய்வதற்கு தயாரானோரின் காணிகளையும் சுவிகரித்த கூட்டுத்தாபனம் கரும்புச் செய்கையில் ஈடுபடுவதற்கான ஆவணங்களையே வழங்கியிருந்தது. இக்காணிகளில் வேளாண்மை செய்ய அனுமதிக்குமாறும், காணிகளுக்கு உறுதிப் பத்திரம் வழங்குமாறும் பல தடவைகள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் விடயம் இன்னும் கைகூடவில்லை என கரும்புச் செய்கையாளர்கள் கவலைப்படுகின்ற னர்.

1989 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஹிங்குராணை சீனித் தொழிற்சாலையை தனியார்மயப்படுத்தி வீரபாகு என்பவருக்கு விற்பனை செய்தது. இதன் பின்னர் நிலவிய போர்ச் சூழலால் சுமார் இருபது வருடங்கள் நீத்தை, சிறுநீத்தை, கல்மடு ஓயா பிரதேச கரும்புச் செய்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால் கடும் நஷ்டத்துக்கு உள்ளான வீரபாகு என்பவர் கூட்டுத்தாபனத்தின் இயந்திரங்கள் மற்றும் இரும்புகளை இந்தியாவுக்கு விற்பனை செய்து, நஷ்டத்தின் ஒரு பகுதியை நிவர்த்தி செய்து கொண்டார்.

பின்னர் 2002 முதல் 2004 வரை ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதனை அரசியல் செல்வாக்குள்ள சிலரின் கைகளில் ஒப்படைத்த போதும், கரும்புச் செய்கையின் பிரச்சினைகள் இழுபறி நிலையிலே சென்று கொண்டிருந்தன. அதன் பின்னர் 2012 இல் மீண்டும் அரசாங்கம் ஹிங்குராணை சீனிக் கூட்டுத்தாபனத்தைப் பொறுப்பேற்று நிர்வகிக்கத் தொடங்கியது.

இப்பகுதியில் கொள்வனவு செய்யப்படும் கரும்பிலிருந்து எதனோல், சீனி,வாசனைத் திரவியத்துக்குத் தேவையான மூலப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சில பகுதிகளில் செய்யப்பட்ட கரும்புகள் உரிய காலத்தில் அறுவடை செய்யப்படாதுள்ளதால் அவை பூத்துக் காணப்படுகின்றன. இவ்வாறு பூத்த கரும்புகளின் எடை குறைவதால், பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு எதி ர்பார்த்த இலாபத்தை பெற முடியாது ள்ளதா கவும் கரும்புச் செய்கையாளர்கள் கவலைப்படு கின்றனர்.

 

-ஏ.ஜீ.எம்.தௌபீக்
 

Add new comment

Or log in with...