அக்கரைப்பற்றில் கட்டுப்பாடுகளை பேணியபடி நெற்செய்கைக்கு அனுமதி

அம்பாறை மாவட்டத்தில் அடுத்த வாரம் 07 மூன்று கமநல சேவை மத்திய நிலயங்களான அக்கரைப்பற்று கிழக்கு – 300, அக்கரைப்பற்று மேற்கு – 400, அட்டாளைச்சேனை -100 பிரிவுகளிலுமிருந்து விவசாயிகள் வேளாண்மைச் செய்கை நடவடிக்கைக்காக நாளாந்தம் அனுமதிக்கப்படுவார்கள்.

இத்தகைய தீர்மானம் சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் விவசாயிகளின் இன்றைய நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குண. சுகுணன் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்களை எடுத்துள்ளனர். மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், பிராந்திய தொற்றுநோய் தடுப்பியலாளர் டொக்டர் நாகூர் ஆரிப், பிரதி பிராந்திய பணிப்பாளர் றஜாப், மாவட்ட மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எ.ஜகுபர், மாவட்ட விவசாய அமைப்புஅதிகாரசபை செயலாளர் எம்.எ.ஸபிஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அங்கு பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அடுத்து வரும் 07 நாட்களுக்குள் மூன்று கமநல சேவை மத்திய நிலயங்களான அக்கரைப்பற்று கிழக்கு – 300, அக்கரைப்பற்று மேற்கு – 400, அட்டாளைச்சேனை -100 பிரிவுகளிலிமிருந்து விவசாயிகள் அதிஉச்சமாக வேளாண்மை நடவடிக்கைக்காக நாளாந்தம் அனுமதிக்கப்படுவார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்குள் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு அனுமதி இல்லை. ஆனால் அவர்களின் விவசாயக் காணி நடவடிக்கைகளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள விவசாயிகளைக் கொண்டு மேற்கொள்ள முடியும்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருந்து ஏனைய நிருவாக பிரதேசங்களுக்குள் விவசாயிகளின் நடவடிக்கை தொடர்பாக குறித்த பிரதேசத்திற்குரிய பொறுப்பு அதிகாரிகளோடு கலந்துரையாடிய பின்னர் முன்னெடுக்கப்படும்.

நாளுக்கு ஒரு நிறத்திலான அனுமதி அட்டை வழங்கப்படும். அதனை கமநல அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்யும்.

விவசாயிகளின் விபரங்கள் 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் அந்தந்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு சமர்பிக்கப்பட வேண்டும்.

விவசாயிகள் காலை 6.00மணிக்கு முன்னர் தத்தமது பிரதேசங்களில் இருந்து வேளாண்மை நிலங்களுக்கு சென்று விட வேண்டும். வேளாண்மை நில பிரதேசங்களில் உள்ள தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு தேவையான உணவுகள் அவர்களினால் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

விவசாயிகளின் செயற்பாடுகள் பொலிஸ், முப்படையினர், விமானப் படையினர், மாவட்ட விவசாயிகளின் அமைப்புக்களின் அதிகார சபை, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அமைப்பின் பொறுப்பானவர்களினால் மேற்பார்வை செய்யப்படும்.

சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்ட வழிகாட்டல்கள் மற்றும் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறும் விவசாயிகள் மற்றும் பொறுப்பு உத்தியோகத்தர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்குறித்த தீர்மானங்கள் அவ்வப்போது பிரதேசத்தில் காணப்படும் கொவிட்19 களநிலைவரத்துக்கு ஏற்ப மாறுபடும்.

வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...