கல்முனை, சம்மாந்துறை பாடசாலைகளை மீளத் திறக்க கிழக்கு ஆளுநர் பரிந்துரை

கிழக்கு மாகாண ஆளுநரால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய வலய பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் ஏ. லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கொவிட்-19 தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

சம்மாந்துறை மற்றும் கல்முனை வலயப் பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியுமென தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 341 ஆக அதிகரித்துள்ளதோடு, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இது வரை பொதுச் சந்தையுடன் தொடர்புடைய 186 பேர் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

ஞாயிற்றுக்கிழமை (06) புதிதாக சம்மாந்துறையில் 05 பேரும், அக்கரைப்பற்றி 01 நபரும், வெல்லாவெளியில் 01 நபருமாக மொத்தம் 07 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அங்குள்ள சகல பொலிஸாருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பீ.சீ.ஆர் பரிசோதனை அறிக்கையின் பின்னர் மீண்டும் பொலிஸ் நிலையம் திறப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கிழக்கு மாகாணத்தில் இது வரையில் 07 ஆயிரத்திற்கு மேற்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையும், 2500ற்கு மேற்பட்ட அண்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நாளுக்கு நாள் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.

தற்போது அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இத் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை விடுவிப்பது மக்களின் கையிலேயே தங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்முனைப் பிராந்தியத்தில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமல் செயற்படுபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உட்பட சுகாதார அமைச்சு விடுத்துள்ள சுகாதார வழிமுறைகளைக் கையாள்வதுடன், தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் மக்களை கேட்டுள்ளார்.

ஒலுவில் விசேட நிருபர்


Add new comment

Or log in with...