கொரோனாவை இல்லாதொழிக்க எதிரணியின் ஒத்துழைப்பும் அவசியம்

அடக்கம் தொடர்பான தீர்மானம் இதுவரை இல்லை

கொரோனாவை முற்றாக ஒழிப்பதற்கு எதிரணி தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றில் உரையாற்றும் போது கோரிக்கை விடுத்தார்.

பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய விடாது கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும்.சிறைச்சாலைகள் மற்றும் கைத்தொழிற்சாலைகளில் கொரோனா பரவுவதை தடுக்க முடிந்துள்ளது என்றார்.

கோவிட் 19 தொற்று தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,

தேசிய மட்ட திட்டமிடல் மற்றும் இணைப்பு செயற்பாட்டின் கீழ் ஜனாதிபதி செயலணி ஒன்றை ஜனாதிபதி நியமித்ததோடு நான் குழுவொன்றை அமைத்தேன். வாரத்தில் பல நாட்கள் ஜனாதிபதி இந்த குழுக்களை அழைத்து முடிவுகள் எடுத்து வருகிறார். பல தொழில்நுட்ப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. புதைப்பது தொடர்பில் தொழில்நுட்ப குழு உள்ளதோடு மருந்து தொடர்பில்,தொற்று நோய் தொடர்பில் குழு செயற்படுகிறது.

மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி வருகிறோம். மக்கள் எமது கோரிக்கையை ஏற்று முகக் கவசம் அணிந்து வருவதோடு ஒரு மீட்டர் இடைவெளியை பேணி வருகின்றனர்.  இது தொடர்பில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.மக்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கி வருகிறோம்.

எமது நாடும் வேறு சில நாடுகளும் மாத்திரம் தான் கொரோனா நோயாளியுடன் தொடர்புள்ளவர்களை விரைவாக கண்டுபிடித்து வருகின்றன.இதற்கு புலனாய்வு பிரிவு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் நாம் 50 ஆயிரம் பரிசோதனை நடத்திய போது ஒரு நோயாளி கூட அடையாளங் காணப்படவில்லை.தற்செயலாக நடத்திய பரிசோதனை மூலமே பிரண்டிக்ஸ் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு அதனுடன் தொடர்புள்ள கொத்தணி பிடிபட்டது.

மினுவங்கொடவுடன் தொடர்புள்ள கொத்தணியூடாக தற்பொழுது நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதில்லை.பேலியகொட மீன்சந்தைக்கு மினுவாங்கொடை தொற்று தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததால் அங்கு பரிசோதனை நடத்தியதில் பெருமளவானவர்கள் அடையாளங் காணப்பட்டனர்.தொடர்ந்து பிடிபடுகின்றனர்.

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களினூடாக வருவோர் PCR பரிசோதனை நடத்தியே வர வேண்டும்.எமது ஆய்வு கூடங்களில் 39 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தனியார் துறையிலும் 9 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மக்களுக்கு சுகாதார நடைமுறைகள் குறித்து அறிவூட்டப்படுகிறது.

ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்கியுள்ள 2800 கட்டில்கள் பயன்படுத்தப்படாதுள்ளன.

நோயாளர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.என்ரிஜன் டெஸ்ட் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.இது தொழில்நுட்ப குழுவுடன் தொடர்புள்ள விடயமாகும். பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய விடாது கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும்.பொருளாதார விடயங்கள் தொடர்பில் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு செயற்படுகிறது.

ஊரடங்கு பகுதி மக்களுக்கு 5 ஆயிரம் கொடுப்பனவும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களும் வழங்கப்படுகிறது.

நிபுணர் குழுவின் வழிகாட்டலின் படி முடிவுகள் எடுத்து செயற்பட்டு வருகிறோம். நான் முழு நாளும் அலுவலகத்தில் இருந்து செயற்படுகிறோன்.மக்களின் சில நம்பிக்கைகள் தொடர்பிலும் செயற்படுகிறோம்.அனைவரும் இணைந்து இந்த தொற்றில் இருந்து நாட்டைமீட்பதற்கு பங்களிக்குமாறு எதிரணியை கோருகிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்,நிசாந்தன் சுப்ரமணியம்

 


Add new comment

Or log in with...