தீர்வு கிடைக்கும் வரை பொறுமையுடன் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்

பிரதமரின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்பு செயலாளர் அப்துல் சத்தார்

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க விவகாரம் தொடர்பில் உரிய தீர்வு கிடைக்கப்பெறும் வரையும் முஸ்லிம்கள் பொறுமை காத்து துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என்று பிரதமரின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்பு செயலாளரும் குருநாகல் மாவட்ட இணைப்பாளருமான அப்துல் சத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் உரிய தீர்வு கிடைக்கப்பெற முன்னர் முஸ்லிம்களில் சிலர் பொறுப்பற்ற முறையில் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் பதிவுகள் தேவையற்ற தாமதங்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தி விடக்கூடிய அச்சுறுத்தல் நிலவுதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்,

அரசாங்கத்திற்கு எதிரான சில பிக்குகளும் சில பெரும்பான்மை அரசியல்வாதிகளும் 2015 இல் முன்னாள் ஜனாதிபதியான தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தோல்விக்கு காரணமான சிலரும் இவ்விடயத்தில் அற்ப அரசியல் இலாபம் தேட முயற்சி செய்வதை மறந்துவிடக்கூடாது என்றார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம்களில் பெரும்பாலானோர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்காத போதிலும் நீதியமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியையும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலையும் தேசியப் பட்டியல் ஊடாக இப்பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களாகியுள்ளது.

என்றாலும் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க விவகாரத்தை வைத்து எதிரணியைச் சேர்ந்த சிலர் அற்ப அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதோடு வெளிநாட்டு சக்திகள் இவ்விவகாரத்தை வைத்து அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தவும் முயற்சி செய்கின்றன.

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் உரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக நீதியமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் உள்ளிட்ட சகலரும் அர்ப்பணிப்போடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...