முஸ்லிம்களுக்கான உரிமையை அரசாங்கம் வழங்க வேண்டும்

பாராளுமன்றில் முஜிபுர் ரஹ்மான்

முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் கால தாமதத்தை ஏற்படுத்தாது முஸ்லிம்களுக்கான உரிமையை அரசாங்கம் உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுக்கு விதிகள் பிரகாரம் வெளியிடப்பட்ட 2055/54 மற்றும் 2155/15 ஆம் இலக்க வர்த்தமானிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாச, முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்யும் விவாரத்தில் அரசாங்கம் இனவாதப் போக்குடன் செயற்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு பின்னர் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான் எம்.பி.,

நீதி அமைச்சர் அலி சப்ரி விசேட குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஆறுமாதங்களாகியுள்ளன. இந்த ஆறு மாதங்களில் குழுவை அமைப்பதற்காக சுகாதார அமைச்சு எவ்வித சாதகமான பதிலும் அளிக்கவில்லை.

கால தாமதத்தை ஏற்படுத்தாது உடனடியாக குழுவை அமைக்க வேண்டும். அதன் ஊடாக முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இதுவரை 9 பேரின் சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன. கால தாமதம் ஏற்பட மேலும் பலர் உயிரிழக்கலாம்.

இது மத ரீதியான பிரச்சினையாகும். இது அரசியல் ரீதியான பிரச்சினையல்ல என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...