ஊரடங்கை மீறிய 596 பேர் கைது; 76 வாகனங்கள் கைப்பற்றல்
கொழும்பின் 5 பிரதேசங்களில், உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மட்டக்குளி, முகத்துவாரம் (மோதறை), ப்ளூமெண்டல், கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட, கொரோனா இரண்டாவது அலை பரவலைத் தொடர்ந்து, கம்பஹா மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டி பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தின 19 பொலிஸ் பிரிவுகளில் படிப்படியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கம்பஹா மாவட்டம் முழுவதும் நேற்று (21) இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், களுத்துறையில் அகலவத்தை, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட 5 கிராமசேகவர் பிரிவுகள், நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட PCR சோதனைகளின் போது, கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பேலியகொடை மீன் சந்தை நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட கொழும்பு மெனிங் பொதுச் சந்தையும் இன்று காலை 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கை மீறிய 83 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கொரோனா இரண்டாம் அலையைத் தொடர்ந்து கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து, இதுவரை 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதேபோன்று 76 வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன.
Add new comment